அஸ்வினி!

Aug 28, 2026,03:08 PM IST

-  சுதா திருநாராயணன்


"அஸ்வினி, நாளை காலை உனக்கு தூக்கு. உன்னோட கடைசி ஆசை என்னன்னு சொன்னா நிறைவேற்றி வைப்போம்" ஜெயிலரின் கருணையற்ற குரல் அஸ்வினியின் காதில் மோதியது. உணர்ச்சியற்ற ஜடமாய் அஸ்வினியின் கண்கள் சூனியத்தை வெறித்தன. 


"உன்கிட்ட தான் சொல்றேன் காதுல வாங்கினியா இல்லையா? " ஜெயிலர் லத்தியினால் லொட் லொட்  என்று தரையில் தட்டிக் கொண்டே மீண்டும் கர்ண கடூரமாக அதட்டினான். 

   

பதில் ஏதும் சொல்லாமல் முழங்கால்களில் முகத்தை புதைத்துக் கொண்டாள் அஸ்வினி. நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அஸ்வினியின் மனக் கயிற்றில் சரம் சரமாய் தொங்கின. 


வீட்டின் நடுக்கூடத்தில் அவள் அம்மா ஊதுபத்தி புகை சூழ,  தலைமாட்டில் விளக்கேற்றப்பட்டு படுக்க  வைக்கப்பட்டு இருந்த போது அஸ்வினியின் வயது ஏழு. பின்னர் அன்பில்லாத அப்பாவின் காரணத்தால் அண்டை வீட்டு ஆச்சியிடம் சரணடைந்தாள் அஸ்வினி. ஆச்சி தன் மூன்று பெண்களோடு அஸ்வினியையும் நான்காவது பெண்ணாக ஏற்றுக் கொண்டாள். அத்தை மாமா சித்தி இவர்கள் எப்போதாவது வருவார்கள். அஸ்வினிக்கு பிஸ்கட் பாக்கெட் கிடைக்கும் அவ்வளவே அவள் அவர்களிடம்   கண்ட அன்பு. 




ஆனால் ஆச்சி, தன் மகள்களுக்கு எது வாங்கினாலும் அஸ்வினிக்கும் அது உண்டு. அஸ்வினி வயதுக்கு வந்த போது பட்டுப்பாவாடை தைத்து போட்டு விருந்து படைத்து மகிழ்ந்தாள் ஆச்சி. ஆச்சியின் கணவர் உலகநாதன் அஸ்வினி பள்ளிக்குச் செல்லும் பொழுது உச்சி முகர்ந்து ஆசீர்வதித்து அனுப்புவார். அதற்காகவே தினமும் அவரிடம் சொல்லிக் கொண்டுதான் பள்ளிக்குச் செல்வாள் அஸ்வினி. 


ஆச்சியின் முதல் இரண்டு பெண்களுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மூன்றாவது பெண் அமுதா திருமண வயதை அடைந்த போது உலகநாதன் காலமாகிவிட்டார். ஆச்சி மிகவும் தளர்ந்து விட்டாள்.  அஸ்வினி கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்த போது அமுதாவுக்கு 24 வயது ஆகிவிட்டது. மற்ற இரண்டு பெண்களுக்கும் 18 வயதிலேயே திருமணத்தை முடித்துவிட்ட ஆச்சி சற்றே நிறம் குறைந்த அமுதா  தெத்துப்பல்லுடன்  விளங்கியதால்  அவளைப் பார்த்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். "ஆச்சி அமுதா அக்காவை படிக்க வைங்க"  என்ற அஸ்வினியின் சொல் அம்பலம் ஏறவில்லை. 40 வயது சிதம்பரத்திற்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டாள் அமுதா. அஸ்வினி அமுதா இருவரும் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை.


புகுந்த வீட்டில் அமுதா  மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாக கேள்விப்பட்ட பொழுது அஸ்வினி மிகவும் வருத்தமுற்றாள். தந்தை ஒரு நாள் நல்ல மூடில் இருக்கும் பொழுது, "அப்பா,  அமுதா அக்காவை அவங்க புகுந்த  வீட்ல ரொம்ப அடிக்கிறாங்களாம். ஆச்சி ரொம்ப வருத்தப்பட்டாங்க. நாம ஒரு நாள் போய் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வரலாம்பா" அஸ்வினி முடிப்பதற்குள் இடியென முழங்கிக் கொண்டு வந்தாள் அஸ்வினியின் சிற்றன்னை. 


"ஆமா நமக்கு வேற வேலை இல்ல பாரு, பொறம்போக்குக்கெல்லாம் வக்காலத்து வாங்க நமக்கு நேரம் கிடையாது. உன்ன படிக்க வைக்கிறதே  ஒரு தண்டம். இந்தப் பஞ்சாயத்துல எல்லாம் உங்க அப்பன இழுத்து விடாதே" அதன் பிறகு ஒரு மாதத்திற்குள் ஸ்டவ் வெடித்து உடல் கருகி இறந்துவிட்டாள் அமுதா. பெண்ணின் கருகிய உடலை பார்த்து நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தவள் தான் ஆச்சி.  அவளும் பின்னர் எழுந்திருக்கவில்லை. அமுதா இறந்தது விபத்தல்ல கொலை என்று பட்டவர்த்தனமாக தெரிந்த போதும் பணம் தன் வேலையை காண்பித்து விட்டது.


அஸ்வினியின் நெஞ்சம் அனலாய் கொதித்தது. அவள் நெஞ்சில் இருந்த தீக்கங்குகள் சிதம்பரத்தையும் அவன் தாயையும் சுட்டெரித்து விட்டது. அவர்கள் வீட்டிற்குச் சென்ற அஸ்வினி இருவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டாள். திட்டமிட்ட கொலை என்று நீதிமன்றம் அவளுக்கு தூக்கு தண்டனை விதித்து விட்டது. அவளுக்காக வக்காலத்து வாங்கி  பீஸ் கொடுத்து வக்கீல் வைத்து வாதாட அவள்  தந்தை தயாராக இல்லை. ஜெயிலில் ஒரு வயதான வார்டன் மட்டுமே அவளிடம் சற்றே கனிவு காட்டினார். "ஏன் புள்ள உன் வாழ்க்கைய இப்படி அநியாயமா தொலைச்சிட்டியே." 


இதோ நாளையுடன் அஸ்வினியின் வாழ்வு முடிந்துவிடும். 


அஸ்வினியின் மனக்குரல் ஓலமிட்டது. அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா ? தட்டி கேட்ட எனக்கு தண்டனையா?  


ஜெயிலர் மீண்டும் உறுமினார். "ஏ புள்ள பதில் சொல்றியா இல்லையா?"


அஸ்வினி மெல்ல கூறினாள். "வார்டன் தாத்தா என் தலையை தடவி உச்சி முகந்து முத்தம் கொடுக்கணும். அதுதான் என் கடைசி ஆசை."  இறுகிப் போயிருந்த ஜெயிலரின் முகத்தில் கூட இரக்கத்தின் ரேகை தெரிந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ஜெயிலரை அலைபேசியில் அழைத்தார். 


“அஸ்வினிக்கு தூக்கு  தண்டனைய  தள்ளி வச்சிருக்காங்க. அவ கூட படிக்கிற பையனோட அப்பா வக்கீலாம். அவரு ரிட் மனு தாக்கல் செஞ்சு மேல் கோர்ட்டுல முறையீடு செஞ்சிருக்காரு. சின்ன பொண்ணு. வாழ வேண்டிய புள்ள.”


வார்டனும் செய்தி அறிந்து அஸ்வினியை காண ஓடி வந்தார். அஸ்வினியின் முகத்தில் முதன்முறையாக ஓர் ஆனந்தப் புன்னகை மலர்ந்தது. 

   

அஸ்வினி வார்டன்,  ஜெயிலர் இருவரையும் நோக்கி கை கூப்பினாள்.  ஓர்  புதிய காலைப் பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்