திண்ணை வைத்த வீடு

Nov 08, 2025,12:53 PM IST

- எம்.கே.திருப்பதி, திருப்பூர்


நகரத்தார் சமூக வீடுகள் அரண்மனை மாதிரி அளவில் பெரியது. முன்பக்க தெரு பின்பக்க தெரு என வியாபித்து நீண்டு கிடக்கும். இல்லுக்கு உள்ளேயே மழை நீர் விழும் அமைப்பு ஏறத்தாழ எல்லா வீட்டிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

 அவைகள் மாளிகைகள்.


ஒவ்வொரு ஜன்னலும் கூட, குட்டி நிலை வைத்த அளவில், கலை அழகு காட்டி கவனப்படுத்தும். வாசல் நிலை ஒரு ஆள் கட்டிப்பிடிக்கும் அளவு பிரம்மாண்டம் பேசும். சிற்ப வேலைப்பாடுகளை செதுக்க மாதக்கணக்கில் நேரம் எடுத்து இருக்கும். லட்சுமி, விநாயகர், சரஸ்வதி உருவங்கள் உயிரில் ஊடுருவி மனங்களை கொள்ளை கொள்ளும்.


அந்த வீடுகளின் திண்ணைகள் பெரும் பேசு பொருள்கள்! வாழ்க்கை வாழ்வதற்கே என இருந்த அந்தக் காலத்தின் வாழ்வின் கதைகள், ஒவ்வொரு திண்ணைக்கும் தெரியும். பொருள்களுக்காக வாழ்வை தொலைத்துவிட்ட இக்கால தலைமுறைகளுக்கு திண்ணைகள் அன்னியம்.


படித்து அறிந்து கொள்ளும் அளவுக்கு திண்ணை வரலாறு சுருங்கி போனது, ஆச்சிகளின் முகச் சுருக்கம் மாதிரி. அந்த வீட்டில் ஆனைகட்டி தீனி போடாத குறை தான். வீடு எப்போதும் ஒரு மிதமான சீதோஷ்ண நிலையில், நிலை கொண்டிருக்கும். பாரம்பரிய கனமான சுவர்களும், உயர்ந்த கூரை அமைப்பும், வெப்புவையும் அப்புவையும் உள்ளே அண்ட விடாது. பழங்கால கோவில்களில் அதன் தன்மையை உணரலாம். 




அழகப்பன் அப்பச்சி அந்த மாதிரி ஒரு வீட்டின் உரிமையாளர். அன்புத் துணைவி ஆதின மிளகி ஆச்சி மங்களகரமாக போய் சேர்ந்து விட்டிருந்தாள்! வாழ்க்கையின் கைத்தடி தவறியதும் அழகப்பன் அப்பச்சி மெய்யொடிந்து போனார். அப்பச்சி வாழ்வின் எல்லைகளை அளந்து பார்த்தவர். வாழ்வு பெருவெளியின் அனைத்து மட்டங்களின், களம் ஆடி கரை கண்டவர்.


எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்தாரோ அப்படி வாழ்ந்தவர். நெறிகொண்ட வாழ்க்கை. கண்ணியத்தின் காவலர்.  யானை வேண்டும் என்றால் யானை வாங்குவார். குதிரை வேண்டுமென்றால் குதிரை வாங்குவார். ஒரு காலத்தில் அவர் குதிரை வண்டியில் போகும் அழகு சுற்று வட்டாரத்தில் மிகப் பிரபலம். உலகமே சுற்றினாலும் பொழுது சாய்வதற்குள் அவருக்கு வீடு வந்து விட வேண்டும். வீடுதான் அவரின் ஆத்மா. பளிங்கு திண்ணை அப்பச்சின் உணர்வு. திண்ணை இல்லாமல் தாத்தா இல்லை.


அவரின் திருமண பேச்சு கூட அந்த திண்ணையில் தான் தீர்மானிக்கப்பட்டது.  அவர் வாழ்வின் பெரும்பகுதி திண்ணையில் தான் கழிந்தது. திண்ணைக்கும் அவருக்குமான உறவு, அன்னைக்கும் பிள்ளைக்குமான உறவு!  அவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பெண், இரண்டு ஆண். மகன் இருவரும் கால மாற்றத்தின் கடும் விதியில் மலேசியாவில் வாழ்க்கையை திணித்துக் கொண்டனர் நிரந்தரமாக.


மகளையும் சிங்கப்பூர் பக்கம் கேட்டார்கள். அப்பச்சி அசைந்து கொடுக்கவில்லை. தவறினால் அந்த மணம் என் பிணத்தின் மீதுதான் என்று சாதித்து காட்டினார். பத்துகல் தொலைவில் பந்தத்தில் மகளை மருமகளாக்கி மாண்பு காட்டி பெருமை பட்டு கொண்டார். கடைசி காலத்தில் ஒண்டிக்கட்டையாய் இருக்க வேண்டாம் என்று மகன்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவர் மசியவில்லை. என் மண், என் மக்கள், என் வீடு என்று அப்பன் முருகனாய் வைராக்கியம் காட்டினார்.


இப்போது இருக்கும் பெரும் ஆறுதல் மகளும் பேரப்பிள்ளைகளும்.... மகள் இல்லுக்கு இவர் போவதும்,இவர் வீட்டுக்கு அவர்கள் வருவதும்... இன்னும் குடும்ப பந்தம் குலையவில்லை  என்பதை எழுதி காட்டுவது போல் இருக்கும். எண்பது அகவை கடந்துவிட்ட அழகப்பன் இன்றும் அதே பளிங்கு திண்ணையில் அமர்ந்து தெருவை நோக்கிக் கிடந்தார். அப்போது ஒன்று இரண்டு ஆட்கள் கடந்து போவார்கள். மாட்டு வண்டிகள் வந்து போய்க் கொண்டிருக்கும். சுங்குடி சேலை கட்டிய ஆயாக்களும்,முண்டாசு, முண்டா பனியன் போட்ட தாத்தாக்களும், குருவிகளின் இரைச்சலும் கண்களையும் காதுகளையும் குளிரச் செய்யும். இக்காலம் தலைகீழ் விகிதங்களாய் மாறி போயிருந்தது.


கிட்டத்தட்ட ஒரு சிறு நகரம் மாதிரி இரைச்சலோடும்,ஜன சந்தடியும், ஊர்திகளும், விளம்பர வண்டிகளும் வாடிக்கையாகி போயிருந்தது. தினம் தினம் தெரு காயப்பட்டு கிடந்தது! அழகப்பன் அப்பச்சியின் இணை வயது அப்பச்சி ஒருவர் இப்போது அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.  


" அழகப்பா... இந்தப் பக்கம் காலாற நடந்து வந்தேன். உன்ன பாக்கணும் போல இருந்துச்சு.அதான்டா வந்தேன். எப்படி இருக்கு உடம்பு? புள்ளைங்க எல்லாரும் போன் பண்ணி பேசுனாங்களா? எப்ப இங்க வராங்க? இந்த வருஷம் திருவிழாவுக்கு உன் வீட்டு மண்டகப்படி தான்டா அப்பு.,.!"


" புள்ளைங்க கிட்ட நினைவு ஊட்டி புடு . மறந்து போயிருப்பாங்க.. "


" பொல்லாத புள்ளைங்க... புண்ணாக்குங்க. இங்க பொழப்பா இல்ல? எவ்வளவோ சொன்னேன். தலை மேல அடிச்சுக்கிட்டேன். தூணிலமோதிக்கிட்டன். கேட்டானுகளா கிறுக்கு புடிச்சவங்க... "


" இந்த நாட்டுல,இந்த மண்ணுல நாம பொழைக்காத பொழப்பா? வாழாத வாழ்க்கையா?சொல்லு படிக்காசு... நம்ம வாழ்க்கையில என்ன குறை? "


" ஏன்டா படிக்காசு... பணம் தான் அவ்வளவு முக்கியமா? நாம இதே ஊர்ல எத்தனை சம்பாதிச்சு இருக்கோம். எத்தனை நல்ல விஷயம் பண்ணி இருக்கோம். என் வீட்டுல நடக்காத ஊர் பஞ்சாயத்தா?எவ்வளவு சுமூகமா தீர்த்து வச்சிருக்கோம்.இந்த திண்ணை கிட்ட கேளுடா கத கதையா சொல்லும்... "


" உனக்கு ஞாபகம் இருக்குனு நினைக்கிறேன்... திண்ணையில  உட்காந்து தெருவை பார்க்க முடியலன்னு காம்பவுண்டு கேட்ட பெருசு பண்ணினேனே...! மறக்க முடியுமா உன்னால?கம்பி வாங்க கூட காரைக்குடிக்கு குதிரை வண்டியில போனோமே... "


 அழகப்பன் அப்பச்சி சொல்ல சொல்ல, அதை படிக்காசு கனத்த மவுனத்துடன் கனத்த மனத்துடன் கேட்டுக் கொண்டு இடம் வலமாய் தலையாட்டினார்.


" போன் என்னடா போனு.. நான் ஒரு மண்ணும் பேசுவதில்லை. ஒரு புண்ணாக்கும் எனக்கு வேண்டாம். எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். அவங்க விதி அங்கன்னு ஆண்டவன் கட்டளை. அதை மாத்த முடியுமா?"


" ரெண்டு ஆம்பள புள்ள இருந்தும் கோயில் கொடைக்கு உரிமை கொண்டாட திண்டாட வேண்டி இருக்கு பாத்தியா? என்னத்த சொல்ல... ஊரைக் கூட்டி அந்த உரிமையை என் மகளோட பேரப் புள்ளைகளுக்கு மாத்தி விடலாம்ன்னு இருக்கேன்.பரம்பரை பட்டயம் இல்லையா... விட்டுக் கொடுக்க முடியுமா? "


சொல்லிவிட்டு இரண்டு முறை இரும்மிக் கொண்டார். நெஞ்சுக்குழி மேலும் கீழும் ஏறி இறங்கியது.


" ஆமாடா அழகப்பா அதை மட்டும் பண்ணிப்புடு.கோயில் உரிமை குலத்துக்கு பெருமை.அது மட்டும் இல்ல,கோயிலுக்கு நிறைய செஞ்சதே உன் குடும்பம் தான். இன்னைக்கும் நீ சொன்னா அது நிக்கும் டா. உன் பேச்சுக்கு என்னைக்குமே மதிப்பு இருக்குடா... "


" படிக்காசு ஊரே மாறிப் போய் கிடக்குடா. பாதி வீட்டில் ஆளுங்க இல்ல... இன்னும் பாதி வீட்டில் பழைய பொருளை வாங்குறவன், அதெல்லாம் இடிச்சு தள்ளி, நில, கதவு, சன்னல், உத்திரம், தூணுன்னு எடுத்துட்டு போயிட்டே இருக்காங்க. இதெல்லாம் பாக்கவா நான் உயிரோடு இருக்கணும்? ஆட்சியோட நானும் போய் சேர்ந்திருக்கலாம்டா...!"


" அழகப்பா நீயாடா இப்படி பேசுற?கவலைன்னா என்னன்னே தெரியாத மனுஷன்டா நீ! கருமத்தில் சிங்கம் மாதிரியும் தருமத்துல தங்க மாதிரியான ஆளுடா நீ.."


" நான் சொல்றேன் கேட்டுக்க. இன்னும் நாம இருக்கிறது எவ்வளவு நாளு..? இன்னைக்கு போகலாம், நாளைக்கு போகலாம் நாலு நாள் தள்ளியும் போகலாம்... கசப்பல்லாம் மறந்துடுடா... உனக்கு யாருமா இல்ல..? கூப்பிட்டா ஓடி வர ஊரே இருக்கு. மக, பேரப்புள்ளக,சாதிசனம் எல்லாம் இருக்காக... ஏன் மனசு போட்டு கசக்குற..?கடைசி காலத்துல சந்தோஷமா போய் சேர்ந்துரலாம்...! மனச திடப்படுத்தி வச்சுக்கடா.. "


படிக்காசு  கூற,,அதை அழகப்பன் அமைதியாக ஆமோதித்தார்.


 "சிதம்பரம் பேரன் படிப்பு செலவுக்கு பணம் வேணும்னு வந்து கேட்டான்...அந்த பக்கம் போனீன்னா வர சொல்லு... நாம உருவாக்கின குடும்பம்டா அது. பாவம், சொக்கநாதன் போய் சேர்ந்துட்டான்.பையன் பரி தவிக்கிறான்...!"


"மாடு இளச்சாலும் கொம்பு இளைக்காதுடா...! அந்த மாதிரி தான் நீயும் உன் கொடையும்...!அழகு உனக்கு வைகுந்தம் தாம்டா..!"


பாராட்டிவிட்டு படிக்காசு ஊன்றுகோல் துணை கொண்டு ஊர்ந்து போனார். அழகப்பன் அப்பச்சிக்கு மன நிறைவாய் இருந்தது. படிக்காசின் பாசமும் பண்பும் உவகையும் இன்னும் அப்படியே உயிரோடு இருக்கிறது. இருவரும் அப்படித்தான்... நகமும் சதையும் மாதிரி!


அப்பச்சி பழைய நினைவுகளில் ஊறி,பளிங்கு திண்ணையில் படுத்து உருண்டார். திண்ணைக்கு முத்தமிட்டார். திண்ணையை கைகளால் தடவி கொடுத்தார். கண்ணீர் துளிகள் திண்ணையை நனைத்தது. இதுவரை கண்ணீரை பார்க்காத திண்ணை அது!


ஊரைப் படித்தவர், ஆளைப் படித்தவர், தன் உடம்பைப் படிக்காமல் இருப்பாரா? அவர் கர்மாவின் கழிவு, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரிந்தது. தன் வாழ்நாளில் அவர் நீண்ட காலம் வீட்டைப் பிரிந்து இருந்தது காசி யாத்திரை காலத்தில் தான். அப்போதும் கூட பாதி சிந்தை காசிநாதர் மேலும் மீதி சிந்தை வீட்டு நாதர் மேலும் ஊசலாடிக்  கொண்டிருக்கும்.


அப்படிப்பட்டவர் இப்போது தன் இல்லை பிரிந்து, திண்ணையை மறந்து, தன் மகள் வீட்டில் சற்று காலத்தை கழிக்க எண்ணினார். அவருக்கும் வீட்டுக்குமான ஒரு அமானுஷ்ய நீண்ட இடைவெளி இது. வீடும் திண்ணையும் அவரை வா வா என்று அழைககிறது.அப்பச்சியும் நிரந்தரமாக வந்து நீண்டுபடுத்துக் கொள்கிறேன் என்கிறார்..!


வீடுகளுக்கும் உயிர் இருக்கிறது. விருப்பமானவரை பிரிவதில் அவைகளுக்கும் ஏக்கமும் ஏமாற்றமும் எப்போதும் இருக்கும். ஆனால் அப்பச்சி அப்படி தவிக்கவிடும் ஆள் அல்ல.திண்ணை வைத்த வீட்டில் எப்போதும் கண்ணை வைப்பவர் அல்லவா அவர்? எதிர்காலத்தில் அந்த இல்லம் அழகப்பன் நினைவு இல்லமாகவும், அழகப்பன் அறச்சாலையாகவும் இருக்கும். வீட்டின் பின்னால் அவருக்கு நிரந்தர இடம் குறித்து விட்டார் அழகப்பன். மற்ற பகுதிகள் அறச்சாலையாக செயல்படும்.


வீடு காலமான பின்னும், அதே மாதிரி திண்ணை வைத்த ஒரு இல்லை கட்டவும்... குறிப்பிட்ட தொகையில் வரும் வட்டியை அறட் செயலுக்கும்...மகளை அதற்கு டிரஸ்டியாகவும் உயில் எழுதி வைத்து வெகு நாட்களாகி விட்டது. அழகப்பனை மீண்டும் திண்ணையில் தாங்க வீடும்,வீட்டில் நீளமான நித்திரை கொள்ள அழகப்பன் அப்பச்சி மனமும், ' எப்ப எப்ப?' என்று எதிர்பார்த்து கிடந்தன.


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாத்தா (கவிதை)

news

கோல்டன் பீகாக் விருது போட்டியில் சிவகார்த்திகேயனின் அமரன்.. கமல்ஹாசன் பெருமிதம்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திண்ணை வைத்த வீடு

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

news

வீதியும் கடலாகும்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 08, 2025... இன்று மாற்றங்கள் தேடி வரப் போகும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்