அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

Sep 12, 2025,01:14 PM IST

சென்னை: சிரிப்புக்கு ஒரு முகவரி என்றால், அது நிச்சயம் வடிவேலுதான். திரையில் அவர் தோன்றினாலே போதும், வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் நகைச்சுவைக்கு ஒரு புதிய இலக்கணத்தை எழுதியவர், அவர். தமிழ் ரசிகர்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட, ஒரு கலைஞன். இன்று (செப்டம்பர் 12) பிறந்தநாள் காணும் நம் ‘வைகைப்புயல்’ வடிவேலுவை பற்றி இந்தக் கட்டுரை.


வடிவேலுவின் பயணம்


வடிவேலுவின் திரைப் பயணம் எளிதானது அல்ல. மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த அவர், சிறு வயதிலேயே நகைச்சுவையின் மீது ஆர்வம் கொண்டார். அவரது ஆரம்ப காலம் மிகவும் கடினமானது. இந்த வேலைதான் என்றில்லாமல் மனிதர் எல்லா வேலையையும் பார்த்துள்ளார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் தேனீர் கடையில் வேலை செய்துகொண்டிருந்த வடிவேலுவை, நடிகர் ராஜ்கிரண் பார்த்துள்ளார். வடிவேலுவின் செயல்பாடுகள் அவரை ஈர்த்துள்ளன, காமெடித்தனமான அந்த சேட்டைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அவர், மெட்ராஸுக்கு வா என்று அழைக்கவே கிளம்பி ஓடினார் வடிவேலு. அதன் பிறகு ராஜ்கிரணின் ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து, திரையுலகில் கால் பதித்தார்.


சினிமா என்ட்ரி : 




அந்தப் படத்தில், ராஜ்கிரண் வடிவேலுவிடம் ஒரு பாடல் பாடச் சொல்ல,  வடிவேலு பாடுவார். இந்தப் பாடல், அவரது நகைச்சுவைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். இதன்பிறகு, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலுவுக்கு, கமல்ஹாசனின் 'தேவர் மகன்' படத்தில் கிடைத்த 'இசக்கி' கதாபாத்திரம், திருப்புமுனையாக அமைந்தது. 


அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். 'தொடர்ந்து விதம் விதமான கேரக்டர்களில் கலக்க ஆரம்பித்தார். அவரது பாடி லாங்குவேஜ் அவருக்கு கறுப்பு நாகேஷ் என்ற பெயரை வாங்கித் தந்தது.


சந்திரமுகி படத்தில் அவர் பேசிய "மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு" என்று அவர் பேசும் வசனம், இன்றும் பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ். படங்களில் நகைச்சுவையில் கலக்கியதுடன், சொந்த குரலில் பல படங்களில் பாடியும் உள்ளார். 


நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணம் :


வடிவேலுவின் நகைச்சுவை, மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது வெறும் வசனத்தால் மட்டும் உருவானது அல்ல, அவரது உடல்மொழி, முகபாவங்கள், பேசும் விதத்தில் ஒரு தனித்துவம் இருக்கும். அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பிரதிபலித்தன.


தலைநகரம் படத்தில் "நானும் ரவுடி தான்", ஃப்ரண்ட்ஸ் படத்தில்  'காண்ட்ராக்டர் நேசமணி'  கேரக்டரில் "நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான். ஆணியே புடுங்க வேணாம்", வின்னர் படத்தில் 'கைப்புள்ள' இவர் பேசும் வசனங்கள், இம்சை அரசன் படத்தில் ஒரு அப்பாவி அரசனாக நடித்தது என வடிவேலுவின் நகைச்சுவை, அனைத்துத் தலைமுறையினரையும் கவர்ந்தது. வடிவேலுவும், அவரது வசனங்களும் இல்லாத மீம்ஸ் இல்லை என்றே சொல்லலாம். "என்ன சின்னபுள்ள தனமா இருக்கு" என்ற வசனத்தை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தாதவர்கள் மிக மிக குறைவு தான். 


மீம்ஸ்களின் நாயகன் வடிவேலு




வடிவேலுவின் நகைச்சுவை, 'மீம்'களின் (memes) மூலம் இன்றும், சமூக வலைத்தளங்களில் உயிர்ப்புடன் இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் வீட்டோடு முடங்கியிருந்த காலத்தில் மக்களை மகிழ்வித்தது வடிவேலுவின் படக் காட்சிகள்தான். வடிவேலுவின் ஒவ்வொரு நகைச்சுவைக் காட்சியும், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, ஒரு தலைமுறையின் அடையாளமாகவே மாறிவிட்டது. வடிவேலுவிற்கு பிறகு எத்தனையோ காமெடியன்கள் தமிழ் சினிமாவில் வந்தாலும் அவர் அளவிற்கு ரசிகர்கள் மனதிலும் சரி, சினிமா துறையிலும் சரி நிலைத்து நிற்கவில்லை. அவ்வளவு ஏன், நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலுவே திரும்பி வந்த போதும் கூட அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. 


வடிவேலுவின் வாழ்க்கை, கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமா உலகில் பல உயரங்களைத் தொட்ட பிறகும், அவர் ஒரு எளிய மனிதராகவே இருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் வடிவேலு, ரசிகர்களுக்குப் பல ஆண்டுகளாக மகிழ்ச்சியையும், சிரிப்பையும் தந்து வருகிறார். அவர் மீண்டும் வெள்ளித்திரைக்கு வர, பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!

news

நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து

news

கொடுமுடி கோவிலும்.. புராண வரலாறும், காவிரி ஆறும் அகத்தியரும்!

news

விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!

news

வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்

news

அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!

news

அதிரடியாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... சவரனுக்கு 82,000த்தை நெருங்கியது!

news

சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு!

news

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை

அதிகம் பார்க்கும் செய்திகள்