- முனைவர் தி. தங்கலட்சுமி
உலகில் மனிதர்கள் எத்தனை பேர் உண்டோ அத்தனை பேரும் தனித்துவம் நிறைந்தவர்கள். ஆம் நம்மின்
முகங்களும் விழி ரேகைகளும் கை ரேகைகளும் மட்டும் தனித்துவமானவை அல்ல; நம்மின் உடல்வாகும்
உள்ளுறுப்புகளும்கூட தனித்துவம் நிறைந்தவையே!
அந்தவகையில் மனிதர்களின் அறிவையும் மேலோட்டமான புரிதல் கொண்டவை, உள்ளார்ந்த பொருளையும் உற்றறியும் நுண்ணறிவு (IQ) படைத்தவை என இயற்கை படைத்திருக்கிறது.
இந்த இயற்கையான நுண்ணறிவு என்பதை எல்லாவிதமான செயல்களையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து
முடிவெடுக்கும் செயல்படுத்தும் ஆற்றல் கொண்டது எனலாம். இதேவிதமான நுண்ணறிவுத் திறனை,
செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பம் இன்று அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு என்னும் AI (Artificial Intelligence - ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் - செயற்கை நுண்ணறிவு) மனிதர்களுக்கு எல்லாவிதமான தரவுகளையும் மற்றும் வேலைகளையும் செய்து கொடுத்து உதவுகிறது.
உதாரணமாக: உங்கள் புகைப்படங்களை அழகூட்டித் தருகிறது. கேட்கும் தகவல்களை அழகான கட்டுரையாகவோ,
கவிதையாகவோ, வாழ்த்து அட்டையாகவோ, காணொளிக் காட்சியாகவோ நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதனை உங்கள் மனம்போல சீரும் சிறப்புமாக வெகு நேர்த்தியாக படுவேகமாகச் செய்து தருகிறது. இதனால் உங்களின் நேரம் அதிகப்படியாக மிச்சமாகிறது.
ஏஐ செய்து தரும் அந்தத் தரவுகளின் வெளியீடுகள் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் இருப்பதில்
மனிதர்கள்,'மதி மயங்கிவிடுகின்றனர்' தங்களையும் தங்களின் சிந்தனை மற்றும் செயல்திறனைத்
தற்காலிகமாக மறந்தேவிடுகின்றனர்.

புதிய வரவான அதிவேகத் தொழில்நுட்பத்தில் மதிமயங்கி அதன் கவர்ச்சியில் தனைமறந்து எல்லா வேலைகளுக்கும்
ஏ.ஐ யையே நாடத் தொடங்கிவிடுகின்றனர். சிறுகுழந்தைகளுக்கு பொம்மைகளின் மீது ஏற்படும் ஆர்வம் மிகு மோகம் போல... தானே எழுத முடிந்த.. செய்வதற்கு இயன்ற பணிகளைக்கூட ஏஐ யின் மூலமே செய்ய முற்படுகின்றனர்.
இப்படியே நிலைமை தொடர்ந்தால்... காலப்போக்கில் மனிதர்கள் தங்களின் சுயமான சிந்தித்துச் செயல்படும் திறனைப் படிப்படியாக இழந்து முற்றும் ஏஐ யைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுவது உறுதி.
சென்ற நூற்றாண்டு வரை, இணைய பயன்பாட்டின் வருகைக்கு முன்பான காலகட்டங்களில் மனிதர்கள் மிகவும்
ஸ்மார்ட்டாக இருந்தனர். மனனமாக வெளியூரில் இருக்கும் உறவுகளின் முகவரியையும் தொலைபேசி எண்ணையும்
கூறும் திறனோடு இருந்தார்கள். இணைய வசதியையும் திறன்பேசியையும் பயன்படுத்தத் துவங்கிய பின்னர்,
தன் கைபேசியின் எண்ணைத் தவிர வேறு ஒருவரின் எண்ணைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாத
அளவிற்கு நம்மின் நினைவுத் திறன் சுருங்கத் துவங்கிவிட்டதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.
பெரியவர்களின் நிலையே இப்படி என்றால், சிறுவர்கள் மாணவப் பருவத்துப் பிள்ளைகளை உற்றுநோக்கினால்
அவர்களின் நிலை படுமோசமாக உள்ளதை உணர முடியும். இன்றைய குழந்தைகள் பிறந்து வளரும் சூழலே
இணையமும் திறன்பேசியும் என முழுக்க முழுக்க டிஜிட்டல் யுகத்தில் வளர்வதால் அவர்களின் இயற்கையான
நுண்ணறிவின் செயல்திறன் முந்தைய காலக்கட்டத்து குழந்தைகளைவிட குறைவு என்றே சொல்லலாம்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதனை உற்றுநோக்கும் திறனில், நினைவில் வைத்துக் கொள்ளும் திறனில்
என்று சற்று பின்தங்கியே காணப்படுகின்றனர். பள்ளிப் பாடங்களைப் படித்துத் தேறி மதிப்பெண் பெறுவதில்
உள்ள முனைப்பும் முனைமழுங்கிய ஒன்றாகவே உள்ளது. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லையே.
அடிப்படையான பொது அறிவும் தேவை என்பதை மறுக்க முடியாது அல்லவா?
முந்தைய கல்வியாண்டில் கற்ற பாடங்களில் இருந்து அடுத்த ஆண்டின் பாடத்தோடு தொடர்புடைய ஒன்றைக்
கேட்டால்கூட அவர்களின் நினைவில் இருப்பது இல்லை; பதில் சொல்ல திணறுகின்ற நிலையே உள்ளது. அந்தந்தப்
பருவத்தில் படிப்பதை அந்தந்தத் தேர்வு முடிந்தவுடன் மறந்துவிடும் கல்விச் சூழலும் ஒரு காரணம். மேலும்
நிறைய மின்னணு கருவிகளை (வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட் ஃபோன்கள், ரீல்ஸ் போன்ற சமூக ஊடக பயன்பாடுகள்)
பயன்படுத்துவதும் இளம்பருவத்து மாணவர்களின் மூளையின் செயல்திறனை மழுங்கச் செய்யும் முக்கியக்
காரணிகளாக உள்ளன.
தேர்வுக்கு முன் படித்து தேர்வெழுதிய அன்றே மறந்துவிடும் இன்ஸ்டென்ட் மெமரி ஆக தற்காலிக நினைவாற்றலையே
பெரும்பாலான மாணவர்கள் கொண்டுள்ளனர். இப்படியாகப்பட்ட சூழலில் தற்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பப்
படிப்பையும் அவர்கள் கற்கத் துவங்கியுள்ளனர். அதன் விளைவாக அவர்களின் மனோபாவத்தில் எல்லாவற்றையும் ஏஐ யிடம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். வீட்டுப்பாடங்களை ஏஐ யைக் கொண்டு செய்துவிடலாம். சுலபமான வழி இருக்கும்போது கடின உழைப்பிற்கோ, தன்முனைப்பான முயற்சிகளுக்கோ தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.
சுய சிந்தனையான செயல்பாடு குறையும்போது இயற்கையான மூளையின் நினைவாற்றல் மற்றும் செயல்திறனிலும்
மாற்றங்கள் நிகழத் தொடங்கும். மனித உடலின் தகவலைப்பு மாற்றமாக மாறிப் போனால்... காலங்கள் கடக்கும்போது மனிதர்கள் தங்களின் இயற்கையான நுண்ணறிவுத் திறனை இழந்து செயற்கை நுண்ணறிவின் அடிமைகளாக மாறிப் போவர்.
எனவே இப்படியொரு நிலை வரும்முன் விழித்துக் கொள்வது அவசியம். மிகவும் தேவையான பட்சத்தில் மட்டுமே
ஏஐ யைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் நமது சுய நுண்ணறிவின் உதவியோடு செயல்படுதலே சிறப்பு.
எந்தவொன்றிற்கும் மிக சுலபமாக அடிமையாகிவிடும் மனிதமனம். அதில் இருந்து மீள்வது மிக மிகக் கடினம்.
இப்போதே நம்மில் பலரும் சமூகவலைதளத்தின் வலையில் சிக்கி மீள முடியாது சிரமப்படுபவர்கள் உண்டல்லவா?!
நம் முன்னோர்கள் மலையும் மண்ணும் ஆறும் அருவியும் மரமும் பூவும் விலங்கும் பறவையும் என இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள் என்று சங்கச் சான்றுகள் எல்லாம் எடுத்தியம்பிய காலம் மலையேறிப்போய்விட்டது. இப்போது நம் வாழ்வியலே அடியோடு மாறியநிலையில் அவரவர்க்குச் சொந்தமான இயற்கையான நுண்ணறிவையும் இழக்கத் தொடங்கி உள்ளநிலைமையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறோம்.

உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். செயற்கையிடம் இருந்து விட்டுவிலகி
இருந்து இயற்கையைப் பேணிடுவோம்!
அதாவது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மிக மிக அவசியத் தேவைக்கு மட்டும் அளவோடு
பயன்படுத்திக் கொண்டு நமது இயற்கை நுண்ணறிவை அதிக அளவில் பயன்படுத்தி இயற்கையை
முறையாகத் தக்கவைத்துக் கொள்வோம்!
இயற்கையோடு இயைந்து இன்னும் சில நூற்றாண்டுகள் மனிதர்கள் மனிதர்களாகவே வாழ்வோம்!
செயற்கை நுண்ணறிவு எனும் எந்திரத்திற்கு அடிமையாகாது இருப்போம்!
அறிவியல் கண்டுபிடிப்பு எனும் அந்நியனுக்கு அடிமைப்படாது முழுசுதந்திர மனிதனாக இருப்போம்!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
{{comments.comment}}