கலெக்டர் அம்மா (சிறுகதை)

Nov 28, 2024,01:25 PM IST

- எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


அர்ச்சனா தனது அலுவலக  அறைக்குள்  நுழையும்  முன் , தன் பார்வையில் பட்ட, 


அ. அர்ச்சனா , ஐ.ஏ.எஸ்., 

மாவட்ட ஆட்சியர், மதுரை.


என்ற பெயர் பலகையை பார்த்தவுடன், மனதிற்குள் சட்டென்று ஆயிரம் நினைவுகள் . (நான்கு நாட்களுக்கு முன்புதான் மதுரை மாவட்ட ஆட்சியராக அர்ச்சனாவிற்கு அரசாணை  வழங்கப்பட்டது)


அவள்  அரை நொடி, அதை நின்று பார்த்துவிட்டு , தனது அறைக்குள் நுழைகிறாள்.


தனது 15ஆவது வயதில் , தான் வரைந்த  அந்த ஓவியத்தை , பிரேம் போட்டு, அவளின் இருக்கைக்கு மேலே, அலுவலக  அறையில், நேற்று மாலையே ... கந்தன் மாட்டியிருக்க வேண்டும் . அர்ச்சனாவின் கண்கள் அதன் மேலேயே நிலை குத்தி நின்றன.


"ஒரு கால் மணி நேரம் ...யாரும் உள்ளே வர வேண்டாம், " என தன் பர்சனல் செகரட்டரி ராதிகாவிடம், சொல்லிவிட்டு, அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினாள்.




திரைப்படமே கண்முன் வந்து போனது...!!!


அப்போது அர்ச்சனா பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.  அவளும் அந்த ஊர் கலெக்டரின் மகள், பிரியாவும் நெருங்கிய தோழிகள். 


பிரியா அவளை ...தனது பர்த்டே பங்க்ஷனுக்கு , தன் வீட்டிற்கு  மாலை வருமாறு ஆசையோடு அழைத்தாள்.


தனது தோழி அன்போடு அழைக்கிறாள் என , அர்ச்சனாவும்  அன்று மாலை பள்ளி முடிந்தவுடன் பிரியாவின் வீட்டுக்கு சென்றாள்.


வீட்டுக்குச் சென்றவளை, பிரியாவின் அம்மா வீட்டிற்குள்ளேயே விடவில்லை. அனாதையை போல் ... ஒரு மணி நேரம் காத்திருந்து விட்டு, அவமானத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.


வீட்டின் உள்ளே... பிரியாவும்  அவள் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தது அர்ச்சனாவிற்கு தெளிவாய் கேட்டது.


"ஏய் ...பிரியா யாருடி அவ ...உன் பிரண்டா . பார்க்க அப்படி இருக்கா..!! வெளுத்துப் போன பாவாடையும்.. பழுப்பு நிற வெள்ளை  சட்டையும் போட்டுக்கிட்டு ....அவ தான் உனக்கு பிரண்டா ....? நீ எப்படி ...அவளை நம்ம வீட்டு..!!  பர்த்டே ஃபங்க்ஷனுக்கு கூப்பிடுவ...?"


 "நம்ம வீட்டுக்கு ...இப்போ எத்தனை விஐபிகள் வருவாங்க . அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க. இவ வந்து நம்ம வீட்டுக்குள்ள நிக்கிறதா..?? எதுக்கு நீ கூப்பிட்ட ..?? ஒரு பியூனோட பொண்ணு நம்ம வீட்டு ஹாலுக்கு வர்றதா..?  அதுவும் டிரெஸ்ஸாவது நல்லா போட்டுட்டு வந்து இருக்காளா..!! எதுக்காக என்கிட்ட கேட்காம அவளை கூப்பிட்ட...?"


"இல்லம்மா... என் பிரண்டு அவ . ரொம்ப நல்லவ .ரொம்ப நல்லா படிப்பா . கிளாசில் ஃபர்ஸ்ட் ரேங்க் அவதான் . அவ அப்பாவுக்கு நல்ல டிரஸ் வாங்கி கொடுக்க முடியல.. எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவாம்மா..  சயின்ஸ் ரெக்கார்ட் நோட்ல படம் எல்லாம், அவ தான் வரைந்துகொடுப்பா . அம்மா ப்ளீஸ்மா அவ வரட்டும்மா .வீட்டுக்குள்ள வரட்டுமா... இன்னைக்கு மட்டும்..!!" கெஞ்சிளாள் பிரியா.


எவ்வளவு கெஞ்சியும் ...பிரியாவின் அம்மா ...அர்ச்சனாவை  அனுமதிக்கவே இல்லை.


கொஞ்ச நேரத்தில் பெரிய பெரிய அதிகாரிகள் , கோட்டெல்லாம் போட்டுக்கொண்டு , பிரியாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். பிரியாவின் அம்மா அவர்களை அப்படி முகம் மலர... வரவேற்றாள். அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் ...வீட்டிற்கு வந்து, அன்று இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள் அர்ச்சனா.


தூக்கம் வராமல் , புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த அர்ச்சனா... அன்று இரவு வரைந்த ஓவியம் இது. தூக்கம் வராத எரிச்சலிலும், வருத்தத்திலும் தனது குமுறலை எல்லாம் ஓவியமாய் தீட்டி விட்டாள். அன்று அவள் மனதுக்குள் ஒரு  விதையை ஆழமாக பதித்து விட்டாள் அர்ச்சனா.


நானும் கலெக்டர் ஆகியே...தீருவேன், என மனதுக்குள் வைராக்கியம் கொண்டாள். அதை வெளிப்படுத்தும் வகையில் அந்த ஓவியம் அமைந்திருந்தது.  வெளுத்துப் போன பாவாடைக்காரி  அர்ச்சனா ஒரு பக்கம்.  அவள் கலெக்டராய் உருமாறி..!!! கம்பீரமாய் அழகான ஆடையில் ...அமர்ந்து கொண்டிருக்கும் அர்ச்சனா ஐ.ஏ.எஸ்.எதிர்பக்கத்தில். இதுவே அந்த ஓவியத்தின் சாராம்சம்.


அந்த ஓவியம் புதுப்பிக்கப்பட்டு ...நிறம்  மாற்றப்பட்டு... நகல் எடுக்கப்பட்டு அழகான ஒரு ஓவியமாய்... ஆச்சிரியப்படுகிற ஒரு ஓவியமாய் இதோ... இங்கே... இப்போது.


தான் ... அன்று வரைந்த ஓவியத்தை தன் வீட்டின் சுவரில் ... தான் படிக்கும் இடத்திற்கு மேல் ....ஒட்டி வைத்து தினம் தினம் பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. அந்த ஓவியம் அவளுக்கு ...தினம்  தினம் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. கலெக்டர் ஆகியே தீரவேண்டும் என்ற வேகத்துடனும் ,  விடாமுயற்சியுடனும் , பிளஸ் டூ ..வில் மாநிலத்திலேயே முதலாவதாக  வந்தது , பி. ஏ படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் படிக்க தேவையான முயற்சிகளை செய்து,  கடும்முயற்சியுடன், இரண்டாவது முறையில்  ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 10 ஆவது இடத்தை பிடித்தது, எல்லா நிகழ்வுகளும் ஒரு நிமிடத்திற்குள் திரைப்படமாய் மனதிற்குள்.


அந்த நிகழ்வு .....அன்று அவள்  வீடு.....இன்று அவளின்  கலெக்டர் பங்களா,  அன்றைய  பியூன் அப்பா, இன்றைய கலெக்டரின் அப்பா, மாவட்ட ஆட்சியர் என போர்டு வைக்கப்பட்ட  தனது கார் , கிடைக்கும் சல்யூட்கள்  என அத்தனையும்,  ஒரு நொடியில் வந்து போய், பெரிய பிரமிப்பை  அவளுள் ஏற்படுத்தி விட்டது. அந்த அவமானம் இல்லையேல்... இன்று இந்த  அர்ச்சனா ஐ.ஏ.எஸ் இல்லை.  தனது தோழி பிரியாவின் அம்மாவிற்கு மானசீகமாய்  நன்றி தெரிவித்தாள்.


பர்சனல் செகரட்டரி ராதிகா வந்து ...மேடம் என கூப்பிட்ட பிறகு தான் , சுய நினைவுக்கு வந்தாள்.... அர்ச்சனா .


"என்ன மேடம்.... டயர்டா இருக்கீங்களா..?"


"ஒன்னும் இல்ல. சும்மாதான்."


"அந்த போட்டோவை நேற்று ஈவினிங், கந்தன் பிரேம் செய்து கொண்டு வந்தான். அதை உடனே, நீங்க சொன்ன இடத்துல, மாட்ட சொல்லிட்டேன் மேடம் .சரியா இருக்கா மேடம்..?"


"ம்...ஓகே ."


 "இந்த ஃபோட்டோ உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா மேடம்..?"


"எஸ்... நான் வரைந்தது.."


"ரொம்ப நல்லா வரைந்து இருக்கீங்க மேடம்."


..ம்..  ஒரு புன் சிரிப்பு.


(  நான் கடந்து வந்த பாதையை  என்றும், மறக்கக்கூடாது என்பதற்காக ,இதை மாட்டச் சொன்னது , ராதிகாவிற்கு தெரிய வாய்ப்பில்லை.)


"மேடம்....உங்கள பார்க்க நிறைய பேர் வெயிட் பண்றாங்க மேடம்.  உங்க பிரண்டு பிரியா...வாம்.  அவங்க அம்மா கூட வந்திருக்காங்க... முதலில் அவங்கள வர சொல்லட்டுமா...?"


"இல்ல.. வரிசைப்படியே அனுப்புங்க ராதிகா..."


"எஸ் மேடம்..."


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?

news

Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்