- முனைவர் தி. தங்கலட்சுமி
முந்நீர் பௌவம் ஆழி பரவை என
பல பல பெயர்கள் கொண்ட பாவையே!
உலகம் தோன்றிய காலந்தொட்டு
பரந்து விரிந்து படுத்திருக்கும் பாற்கடலே!
உயிர்களின் முதல் தோற்றத்திற்குக்
காரணமாகத் திகழ்ந்த அன்னையே!
எப்பொழுதும் வாயோயாது சலசலத்திடும்
வாயாடி அலைகளை மேற்பரப்பில் கொண்டிருப்பினும்
ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானிபோல்
விளங்கித் தோன்றிடும் காட்சிமுரணே!

பலகோடி நீர்வாழ் உயிரினங்களையும்
முத்து பவளம் போன்ற விலைமதிப்பற்ற செல்வங்களையும்
தன்னகத்தில் வைத்திருக்கும் செல்வக் களஞ்சியமே!
சிறியவர் பெரியவர் கவிஞர் காதலரென
மனித இனம் அத்தனைக்கும்
அலுப்புசலிப்பே தோன்றா வண்ணம்
உன்னில் உன்னை ரசிக்கத் தூண்டிடும்
ஈர்ப்புநிறை விந்தைக்குரிய வியப்பே!
என்றென்றும் எழுத்தாளர்களின்
உணர்ச்சி வர்ணனையின் உவமானப் பொருள் நீயே!
பெண்ணின் மனம் உன்னிலும் ஆழமாம்
எண்ணிறந்த எழுத்தாளரின் வாக்குமூலம் இதே!
உலகினுக்கு நீயோர் நிறைகுடம் - ஆனபோதிலும்
குறைகுடம் போல் கூத்தாடிடும் அலைகள்!
உன்னிலிருந்து மேகங்கள் நீரினைத் தொடர்ந்து
மொண்டு முகர்ந்த போதிலும்
சற்றும் வற்றிடாத ஜீவஊற்று நீயே!
இயற்கை படைத்திட்ட
அசையாது அசைந்தாடிடும்
அதிசயம் நீயே!
உயிர்ப்பற்ற எதனையும்
தன்னுள் தங்க அனுமதியா
உயிர்ப்புள்ள உப்புக்கடலே!
அலைவாய் கரையில்
அலையாய் அலைந்து
அதிசயங்கள் பல கண்டடைந்தோர் அநேகர்!
கடல்கோளாய் சுனாமியாய்ப்
பொங்கியெழுந்து வாரிச் சுருட்டி
தன்னடியில் புதைத்து வைத்துள்ள
சரித்திர காலத்தின் கோலத்தையே வாரிச்சுருட்டி
தன்மடியின் கொசுவமாய் செரித்துச் செருகியுள்ள
ராட்சச அலைகளின் ராஜமாதாவே!
கொதித்துக் கொப்பளிக்கும் கொடூர எரிமலையும்
குளிர்ந்து விறைக்க வைக்கும் கொடும் பனிமலையும்
எதிரும் புதிருமான இருநிலையும் உன்னுள்!
துருயேறா தூய உறைபனிஅடர் துருவங்கள்
கருங்கடலும் செங்கடலும் என வண்ணமயமும்
மர்மங்கள் நீடிக்கும் மர்ம முக்கோணங்களும்
மனித உடலின் ஜீரணமண்டலம் போல
பெருங்குடலும் சிறுகுடலுமாய்...
பெருங்கடலும் பல பல சிறுகடலும் சூழ்
நீர்வாழ் ஜீவன்களின் ஜீவித மண்டலம் நீயே!
எண்ணிறந்த தீவுக் கூட்டங்களும்
எண்ணில் அடங்கும் கண்டங்களுமென
புவிக்கோளத்தை நிறைத்து நிற்கும்
நித்திய விநோத நீருலகின் நிஜமே!
எளியோருக்கு வாழ்வளிக்கும் வளமே!
ஆழ்கடலாய் சூழ்ந்து நின்று சுகம்தரும் சுந்தரக்கடலே!
இயற்கை நல்கிய நற்கொடையே!
செய்திட்டு சிலரது வாழ்வை
ரட்சித்தும் சிலரது வாழ்வை
பட்சித்தும் என எப்போதும்
ஆர்ப்பரிக்கும் ஆனந்தமே!
நீயே படைப்பின் பிரம்மாண்டம்
நீயே திகைப்பின் எல்லை!
(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}