அடி என் தங்கமே. இதுக்குப்போய் யாராவது கவலைப்படுவாங்களா?.. புதுவசந்தம் (7)

Nov 13, 2025,03:22 PM IST

- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி 


இரவின் மடியில்  வழக்கம் போல் வானத்து நட்சத்திரங்களிடம் பேசிக்கொண்டு இருந்தாள் சுகந்தி.


மூர்த்தி குடும்பம் வந்து அவளைப் பெண் பார்த்துச் சென்றது முதல் எப்போதும் ஆளாளுக்கு அவள் திருமணம் பற்றியே பேசியதை அவளால் தவிர்க்க முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்தாள் சுகந்தி. அவளின் டீச்சிங் ஒர்க்கிலும் கூட கான்சன்டிரேட் பண்ண முடியாத மனநிலையில் இருந்தவளுக்கு இரவின் தனிமையும், வானத்து நட்சத்திரங்களும் தான் பெரிய ஆறுதல் தருவதாக நினைத்தாள். ஏதேதோசிந்தனையில் இருந்தவள் அவள் பெரியம்மா குரல் கேட்கவே தன்னிலைக்குத் திரும்பினாள்.


சுகந்திம்மா, உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி எப்போ பார்த்தாலும் எதையோ பறிகொடுத்தமாதிரி இருக்கே. கலகலனு இருக்குற பொண்ணு நீ இப்பல்லாம் சரியா பேசுறது இல்ல, சிரிக்கிறதில்ல. ஏண்டா, உனக்கு என்ன தான் பிரச்சனை? பெரியம்மா என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே. எதுவாயிருந்தாலும் நீ என்கிட்ட மனசுவிட்டுப் பேசலாம். உன்னை இப்படிப் பார்க்க எனக்கு  கஷ்டமா இருக்கு சுகந்தி. இங்க நம்மைத்தவிர வேறு யாரும் இல்ல. அதனால  நீ உன் மனசுல என்ன இருக்குனு சொல்லு என்றாள் பார்வதி கனிவான குரலில்.


பெரியம்மா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு தோணுது. நல்லா சம்பாதிக்கனும். நாலு பேருக்கு உதவனும், சேவை செய்யனும்னு  எனக்கு ஆசையா இருக்கு.  ஆனால் எல்லாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக்  கட்டாயப்படுத்துறது எனக்கு சுத்தமாப் பிடிக்கல. அதான் என்னால இயல்பாக இருக்க முடியல. நான் என்ன செய்யட்டும் பெரியம்மா.


அடி என் தங்கமே. இதுக்குப்போய் யாராவது கவலைப்படுவாங்களா?




கல்யாணத்துக்கு பிறகும் நீ நல்லா வேலைக்குப்போ., நாலு பேருக்கு நல்லது செய். உன்னை யாரு தடுக்கப் போறாங்க சொல்லு. இது நல்ல விஷயம் தானே. சுகந்தி நீ தேவை இல்லாம கவலைப்பட்டு உன் மனசைக் கெடுத்துக்குறேனு தோணுது. போன மாசம் உன்னைப் பெண் பார்த்துட்டுப் போன பையனை உனக்குப் பிடிக்கலனா சொல்லு. வேற மாப்பிளை பார்த்துக்கலாம். அதுக்காக கல்யாணமே வேண்டாம்னு சொல்லாத. உன் பிரெண்ட்ஸ் எல்லாம் கல்யாணம் பண்ணி நல்லாத்தானே இருக்காங்க. நீயும் அவங்களப்போல சந்தோசமா வாழணும்னு தான் நாங்க எல்லாரும் ஆசைப்படறோம்.


அப்புறம் உனக்கு ஒரு சந்தோசமான செய்தி. அடுத்த வாரம் வெளிநாட்டிலிருந்து உங்க பெரியப்பா இங்க வரப்போறேனு கால் பண்ணாருடா. இனிமேல் எப்போதும் இங்க நம்ம கூடத்தான் இருக்கப்போறாராம். உன்கிட்ட சொல்லச் சொன்னாருடா.

பெரியம்மா, அடுத்த வாரமே பெரியப்பா வராரா என்ன?


ஆமாம். ஏன் கேட்குற. உனக்கு ஏதாவது தேவைனா சொல்லு. உன் பெரியப்பா வாங்கிட்டு வருவார்.


அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம்.


பெரியப்பா நல்லபடியா இங்க வந்து சேர்ந்தாலே போதும். எனக்குத் தூக்கம் வருது பெரியம்மா, நான் தூங்குறேன். நீங்களும் ரெஸ்ட் எடுங்க என்றுவிட்டுப் படுத்தவள் சில நொடிகளில் நீண்ட உறக்கத்துக்குப் போனாள்.


இரண்டு மாதங்களுக்குப் பிறகு.


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழி சுகந்தி மனதையும் கரைத்து விட்டிருந்தது.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுகந்தியின் பெரியப்பா அவள் மனதை மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை. அம்மா ராஜம். சிதம்பரத்திலேருந்து அந்த மூர்த்தி பலமுறை கால் பண்ணிட்டாருமா. நாமெல்லாரும் அங்க போய் அவங்க குடும்பம், அந்தப் பையனைப்பற்றி விசாரித்துவிட்டு வரலாம்னு தோணுது. நீ என்னம்மா சொல்றே கேட்டார் சுகந்தியின் பெரியப்பா குருசாமி.

மாமா. இதில் நான் சொல்ல என்ன இருக்கு. போய்ட்டு வரலாம் மாமா. எதுக்கும் சுகந்திகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க. 


அதெல்லாம் நான் பாத்துக்கறேன், நாளை மறுநாள் நாம சிதம்பரத்துக்கு வரப்போறதா அவங்க வீட்டுக்கு நானே தகவல் சொல்லிடறேன். நீங்க பயணத்துக்குத் தயாராகுங்க என்றுவிட்டுக் கடந்த குருசாமியை நிறுத்தினாள் அவர் தாய் சொர்ணம்.

குரு, நாளைக்கு நல்ல நேரம் பார்த்து கெளம்புங்க. பக்கத்துல இருக்குற நம்ம பிள்ளையார் கோவில்ல சாமி கும்பிட்டுப் போய்வாங்கப்பா என்று சொர்ணம் சொல்ல ம்ம்ம் சரிம்மா. நீ சொன்னபடியே செய்கிறோம் என்றுவிட்டுக் கடந்தார்.


அன்று ராஜம், அவள் அண்ணன் கிருஷ்ணன், லலிதா, பார்வதி, குருசாமியைச் சுமந்து கொண்டு வந்த கார் மதியம் மூன்று மணிக்கு மேல் சிதம்பரம் வந்து சேர்ந்தது.


வந்தவர்களை மூர்த்தி தான் பார்த்துப்பார்த்து கவனித்தார். ஆனாலும் அவர் மனைவி பட்டும் படாதது போல் நடந்து கொண்டது பார்வதிக்குச் சற்றே நெருடலாக இருந்தது. மூர்த்தி வீட்டில் அவர் மனைவி சகுந்தலை, மகன்களை அறிமுகம் செய்து வைத்தார். வந்தவர்களுக்கு வீட்டைச்சுற்றிக் காண்பித்து சிரிக்கச்சிரிக்கப் பேசி உபசரித்தது கண்டு மனம் நிறைந்தது சுகந்தியின் குடும்பம்.


பிறகு எல்லாருமாகச் சேர்ந்து சுந்தர் இருப்பிடம் நோக்கிப் பறந்தனர். மூர்த்தியும் அவர்களுடன் கலந்து கொள்ள ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவர்கள் சுந்தரின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்ததால் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தான் சுந்தர்.  திடீரென இவர்கள் காரில் வந்து இறங்கியதைப் பார்த்தவன் பதட்டமானான். எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத சுந்தர் புதிதாக வந்திருந்த குருசாமியை நோக்க மூர்த்தி அவனைப் புரிந்து கொண்டவராக அவனுக்கும், அவன் நண்பர்களுக்கும் குருசாமி மற்றும் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பரஸ்பரம் அறிமுகத்திற்குப் பிறகு எல்லோரும் சுந்தர் மற்றும் அவன் நண்பர்களிடம் பொதுவாகப் பேசியவர்கள், அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினர்.


காரில் எல்லோரும் சிரித்துப் பேசியபடி வர பார்வதி மட்டும் அமைதியாக வந்ததை ராஜம் கவனிக்கத் தவறவில்லை.

என்னக்கா, ஏன் திடீர்னு டல்லா ஆயிட்டீங்க கேட்டாள்.


ராஜம் எனக்கென்னவோ நம்ம சுகந்திக்கு இந்தப் பையன் சரியான துணையா இருப்பான்னு தோணலை அதான் யோசிச்சேன்.

ஏன்க்கா, ஏன் இப்படிச் சொல்றீங்க? 


ராஜம் அந்தப் பையன் வீட்டை நீ கவனிச்சியா, இல்லையா? எங்க பார்த்தாலும் சிகரெட் துண்டுகளும், விஸ்கி, பிராந்தி பாட்டிலா கிடந்தது. அதான் எனக்கு கலக்கமாயிருக்கு. நம்ம சுகந்தி குணத்துக்கு இந்தப்பையன் செட் ஆவான்னு எனக்குத் தோணல என்றாள் பார்வதி நிதானமாக.


அட போங்க அக்கா. இது தான் விஷயமா? நான் என்னவோ ஏதோனு நெனச்சேன். அக்கா அந்தப் பையன் பேச்சிலர் பிரென்ட்ஸ்ங்களோட இருக்கான். பசங்கனா அப்படித்தான் இருப்பாங்க. தவிர இந்தக் காலத்தில் இது ஒரு பெரிய விஷயமே இல்ல. அவ்வளவு ஏன்கா. நம்ம வீட்ல அண்ணன் தம்பி எல்லாம் ஒன்னாச் சேர்ந்து எப்பவாச்சும் தண்ணி அடிப்பாங்க தானே. இதில் என்ன தவறு இருக்கு என்று சிரித்தாள் ராஜம். ஆமாம் பார்வதி அக்கா. பேச்சலர்ஸ் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் அக்கா. மொடாக் குடிகாரனா இருந்தால் தான் தப்பு. இந்த விஷயத்தை இதோட மறந்துடுங்க. சுகந்திகிட்ட இதப்பத்தி எதுவும் சொல்லாதீங்க. அப்புறம் அவ மனச மாத்தறது முடியாதகாரியமாகிடும். நான் விசாரித்த வரை அந்தப்பையன் சுந்தர் பற்றி அவன் நண்பர்கள், அக்கம் பக்கத்துல எல்லாரும் நல்ல விதமாத்தான் சொன்னாங்க அக்கா. அந்தப் பையன் வீட்ல சிகரெட்டும், பாட்டிலுமா கிடந்தா  அவன் தான் குடிகாரன்னு அர்த்தமா என்ன? அவன் பிரென்ட்ஸ்ங்க கூட ஸ்மோக்கரா, டிரெங்க்கார்டா இருக்கலாம் இல்லையா என்றாள் லலிதா.


கிருஷ்ணனும், குருசாமியும் அதை ஆமோதிக்க...


என்ன இருந்தாலும் இன்னும் கொஞ்சம் விசாரித்துப் பார்த்துவிட்டு என்ற பார்வதியை நிறுத்தினாள் லலிதா. அக்கா அந்தப் பையனைப்பத்தி நீங்க வீணாக சந்தேகப்பட, கவலைப்படத் தேவையில்லை. அக்கா சுகந்தி மேல நம்ம எல்லாருக்கும் அக்கறை இருக்கு. இந்தப் பையன் அவளைத் தாங்குவான் பாருங்க. அதை நீங்க பார்க்கத்தான் போறீங்க என்று சிரித்தாள் லலிதா.

நடக்கப்போகும் விதியின் விளையாட்டை அறியாமல் அந்தச் சிரிப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டனர் ராஜம் உட்பட அனைவரும்.


(தொடரும்)


(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!

news

இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!

news

பெற்று வளர்த்த தாய்மடி

news

மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)

news

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??

news

ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்

news

விஜய் பக்கம் திரும்புகிறதா காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் சலசலப்பா.. என்ன நடக்கிறது?

news

கமல் தயாரிக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகல்...பரபரப்பு விளக்கம்

news

அடி என் தங்கமே. இதுக்குப்போய் யாராவது கவலைப்படுவாங்களா?.. புதுவசந்தம் (7)

அதிகம் பார்க்கும் செய்திகள்