அன்னையின் மருத்துவம்

Aug 17, 2026,02:50 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


தமயந்தி மிக மன சோர்வுடன் வீடு வந்தாள் .கணவன் திவாகரன் அவளுக்கு ஆறுதல் கூற; தமயந்திக்கு வருத்தமும், கவலையும் கூடியதே, தவிர குறையவில்லை. மூன்று வயதான சேகரனுக்கு இன்னும் ஒரு வார்த்தை கூட பேச வரவில்லை என்பதே பெருங்கவலையாய் இருந்தது. மாமாவின் பெண் மைதிலி குறிப்பட்ட இ.என்.டி  மருத்துவர் அழகேசனைப் பார்த்து  வந்ததில் கவலை இன்னும் அதிகமாயிற்று.


அவர் பரிசோதித்த வரை எந்த ஒரு கோளாறும் இல்லை. ஆட்டிசமாக இருக்கலாம் நீங்கள் அதற்கான மருத்துவரைப் பாருங்கள் என்று சொல்லி விட்டார். திவாகரன் தூத்துக்குடியில் இருக்கும் தன் அம்மாவிடம் சொல்லி புலம்பினான். அம்மா, சுசிலா "கவலைப்படாமல் இரு. இங்கு என்னிடம் ஒரு மாசம் கொண்டு வந்து விடுங்கள். திருச்செந்தூர் முருகன் அருளால்  குழந்தை பேசுவான்" என்றாள்.


இரண்டு பேருக்கும் கணினி அலுவலகத்தில் வேலை.... வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியிருந்ததால், அம்மாவை  சென்னைக்கே வரும்படி சொல்லிவிட்டார்கள். அம்மா வந்த நேரம், இருவருக்கும் வேலையின் நிமித்தம் மூன்று மாதம் வெளிநாடு பயணம் போக வேண்டியிருந்தது. தினமும் காணொளியில்  அம்மாவுடன் பேசிய வண்ணம் இருந்தார்கள்.


பயணம் முடிந்து வந்ததும், அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வீட்டின் உள்ளேயிருந்து, சேகரின் குரல், "பாட்டி! அம்மா வந்துட்டாங்க .அம்மா! “என்றவாரே ஓடி வந்து தன்னைக் கட்டிக்  கொண்ட குழந்தை  சேகரைக் கண்ட, இருவருக்கும் மகிழ்ச்சியில் கையும் காலும் ஓடவில்லை. "எப்படி அத்தை?"என்று கண்களில் நீருடன் தமயந்தி கேட்க, " ஆமாம்! ஏற்கனவே கொரானா நோய் தொற்று என வீட்டிலே அடைந்தாயிற்று.  அந்த சமயத்தில் பிறந்தவன் இவன். 




மேலும், வீட்டிலே  நீங்கள் இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில் முடங்கி உட்கார்ந்து  அமைதியாக வேலை பார்த்துட்டே இருந்தால்,குழந்தை எப்படி பேசுவான்? நான் தினமும் அவனோடு பேசி , விளையாடி , கீழே மைதானத்தில் மற்ற குழந்தைகளுடன் விளையாட விட்டு, டீ‌வியில் கார்ட்டூன் போட்டு கதை சொன்னேன். அவ்வளவுதான். கற்பூர புத்தி என் பேரனுக்கு. 


"சட் "என் வாயில் வார்த்தைகள் வந்துடுத்து. அந்த டாக்டர் எந்தக் குறையும் இல்லை என்றார் இல்லையா? காதில் பேச்சு சப்தம் விழுந்தவுடன் குழந்தை மட மடவென பேச ஆரம்பிச்சுட்டான்.எல்லாம் முருகன் அருள்" என்று சேலைத் தலைப்பால் தமயந்தி கண்ணில் இருந்து வழியும் நீரை ஒற்றித் துடைத்தாள், சுசிலா அத்தை.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்