தெளிந்த நல்லறிவு...!

Apr 04, 2026,11:09 AM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


தகவல்தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் இணைய பயன்பாட்டில் எளிய மக்கள் அதிகம் பேர் தங்களை அறியாமலேயே சிலபல ஏமாற்று வேலைகளுக்கு பலியாகின்றனர்.


பொதுமக்களின் மூளையை அவர்கள் உணராதபடி வெகு சுலபத்தில் மயக்கிவிடுகின்றனர். இலவசம் அல்லது தள்ளுபடி, விலை மலிவு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற வாசகங்கள் மூலம் மக்களும் சுலபமாக மதிமயங்கிவிடுகின்றனர். அதன் பின்னால் உள்ள வியாபார உத்திகளை பெரும்பாலான மக்கள் யோசிப்பதே இல்லை. 


சைஃபர் கிரைம் என்று சொல்லப்படும் நூதனக் கொள்ளைகளிலும் மக்கள் எளிதாக சிக்கிக் கொள்வதற்கும் இதே கவர்ச்சிகரமான வாசகங்கள்தான் காரணம்.


இவையெல்லாம் ஒருபுறமிருக்க, சமூக ஊடகங்களிலும் இதுவே மலிந்து காணக் கிடைக்கின்றன. ‘இந்த வீடியோவைப் பார்த்ததும் பகிர், யோகம் வரும், நல்லது நடக்கும்’. மக்களின் இறை நம்பிக்கையை வைத்து சிலர் பிழைக்கின்றனர். ‘உன்னைத் தேடி வந்திருக்கிறேன், தள்ளிவிட்டுப் போகாதே’ - என்று கடவுளர்கள் சொல்வதுபோல் வாசகங்கள். ஏஐ (AI) காலத்திலும் இன்னும் இதுபோன்ற வித்தைகளையே செய்து கொண்டு இருக்கின்றனர். 




அன்றாடம் புழங்கும் தளமாக, மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட புலனக் குழுக்களிலோ இன்னும்  பயங்கரம்! 


‘உண்மையான இந்தியனாக இருந்தால், இந்தப் பதிவை இத்தனை பேருக்குப் பகிர்’, ‘பச்சைத் தமிழனாக இருந்தால், இதை இத்தனைக் குழுக்களுக்குப் பகிர்’, ‘உண்மையான ---- ஆக இருந்தால் இதை அனைவருக்கும் அனுப்பு’. 

அப்பப்பா... இப்படிப்பட்ட வாசகங்களைக் கண்டவுடன் நம்முள் உறங்கிக்கொண்டு இருக்கும் அத்தனை வீரதீர உணர்வுகளும் சடக்கென விழித்துக் கொண்டுவிடுகிறது. அதில் என்ன சொல்லி இருக்கிறது என்ற சாரத்தையோ ஓரத்தையோ எதையுமே கண்டுகொள்வதோ கொஞ்சம் நிதானமாக சிந்திப்பதோ கிடையாது. 


தமிழனாகவும் இந்தியனாகவும் வீராவேசம் கொண்டு பொங்கி எழுந்து, தங்கள் தொடர்பில் உள்ள அனைத்து நண்பர்கள், உறவுகள், குழுக்கள் என அனைத்திற்கும் அவசரச் செய்தி, அபாயத் தகவல் மின்னல் வேகத்தில் பறந்து பறந்து பகிரப்படும். 


பிரிவினைவாதத்தைத் தூண்டும் செயல்கள், மத இன பேதங்களைத் தூண்டி இனக்கலவரங்களை ஆரம்பிக்கும் தொடக்கப் புள்ளிகளாக சில விஷமிகள் சர்வ சாதாரணமாக சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிடுகின்றனர். 


இதில் அடங்கியுள்ள வன்மம் புரியாத பல அப்பாவிகள், அந்தத் தகவல்களால் நன்மையா? தீமையா? என்ற விளைவுகள் குறித்த எந்தவொரு சிந்தனையும் இல்லாமல், ஏதோ தேசபக்திச் செயலாக பெருமிதத்துடன் பலருக்கும் பகிர்கின்றனர்.  


“கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக” – என்ற வள்ளலாரின் வரிகளை முழங்கும் நாமேதான், வேற்று மதத்தினரை உள்ளூற வெறுத்துக்கொண்டும் பகை பாராட்டிக்கொண்டும் வாழ்கிறோம். வெளிப்பார்வைக்கு அனைத்து இனத்தினரின் விழாக்களையும் கொண்டாடிக் கொள்வதாகவும் காட்டிக் கொள்கிறோம். 


ஏதோ ஒரு பேரிடர் நேரும் சமயத்தில் மட்டும் இனம், மொழி, மதம் கடந்த மனிதம் வெளிப்பட்டால் போதாது. தேச எல்லையில் வீரமரணம் நேரும்போது மட்டும் நமது சகோதரத்துவத்தை வெளிக்காட்டினால் போதாது.  

சமூக ஊடக பயன்பாட்டின் பகிர்வுகளால் யாருக்கு என்ன பயன்???? சிந்தித்துச் செயல்படப் பழகுவோம்.


புலனத்தில் வந்து விழும் தகவல்களை முழுமையாக படிப்பதும் இல்லை. அதில் உள்ள தகவல் உண்மைதானா? மற்றவர்களுக்கு பயன்படுமா? முதலில் தனக்கு அது தேவைதானா? என்றெல்லாம் துளியும் சிந்திப்பதுகூட கிடையாது. 

பார்த்தவுடனே அந்தத் தகவலின் உள் நம்மையும் அறியாது ஈர்க்கப்பட்டு, பொதுநல சேவையாக உடனடியாகப் பகிர்ந்து விடுகிறோம்.


“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”


என்பதைக் கொஞ்சம் நடைமுறை வாழ்வில் கைக்கொண்டு வாழ்வோம்! தேவையற்ற பிரிவினைகளையும் மதவாத பிற்போக்குத்தனங்களையும் ஊக்கப்படுத்தாது, உயிர்ப்போடு மனிதம் காப்போம்! நன்கு கல்வி அறிவு பெற்றவர்களே இத்தகைய தெளிந்த நல்லறிவைப் பேணாது, ஏமாறுபவர்களில் முதன்மையிடம் வகிக்கின்றனர். நமது தெளிந்த நல்லறிவை பயன்படுத்துவோம்! விழிப்புணர்வு என்ற பெயரில் மேலும் மேலும் அறியாமைக் குழப்பத்தில் மூழ்கிப்போகிறோம் என்பதே நிதர்சன உண்மை. 


ஒரு செய்தியை பகிரும்போது மட்டும் நாம் அவர்களாக வாழாமல் எப்போதும் சிறந்த மனிதர்களாக வாழ்வோம்! ‘தெளிந்த நல்லறிவு’ கொண்டு வாழ்வோம்! வாழ்விப்போம்!!


(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ADMK to TVK: தவெக நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்.. முதல்வர் விஜய் திட்டம்தான் என்ன?

news

CM Vijay Returns to Chennai: ராகுலை சந்திக்காமல்.. சென்னை புறப்பட்ட முதல்வர் விஜய்.. என்ன காரணம்?

news

Karnataka Power Trasnsition: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்

news

டொனால்ட் டிரம்ப் முகஜாடையில் உள்ள எருமை மாடு.. பக்ரீத் குர்பானியிலிருந்து விலக்கு!

news

கருப்பு நிற தண்ணீர்.. திரில்லான தால் ஏரி படகுப் பயணம்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 10)

news

Sasikala Viswanathan: காதல் பார்வை.. காமம் இல்லை.. நிலவு சிரிக்கிறது.. துளிப் பாக்கள்!

news

உணவு பழக்கமும் பழமொழிகளும்.. சூப்பர் காய்.. பாகற்காய்.. கசந்தாலும் உடம்புக்கு நல்லது!

news

சோனியா, ராகுல் காந்தியை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்!

news

The Sacrifices of a Mother.. ஒரு தாயின் தியாகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்