ஆர்.என். ரவி, அண்ணாமலை இடத்தைப் பிடிக்க முடிவு செய்து விட்டார் விஜய்.. விசிக கடும் தாக்கு

Sep 21, 2025,02:06 PM IST

சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவியும், அண்ணாமலையும் செய்து வந்த வேலையைத்தான் இப்போது விஜய் கையில் எடுத்திருக்கிறார். அவர்களது இடத்தைப் பிடிக்க அவர் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. ஆனால் போகிற போக்கில் பொய் சொல்லி விட்டுப் போவதை மக்கள் நிராகரிப்பார்கள் என்று விசிக துணைப் பொதுச் செயலாளரும் நாகப்பட்டனம் எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.


நாகப்பட்டனம் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசிய பேச்சு குறித்து இன்று ஷாநவாஸ் காட்டமான ஒரு பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து:


தமிழ்நாடு அரசியல் களத்தை நாகரீகமானதாகவும் தமிழ்நாடு மரபுகளுக்கு ஏற்ற ஒரு களமாகவும் நாம் மேம்படுத்த நினைக்கிறோம். ஆனால் அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசியல் களத்தை மிகவும் கீழிறக்கி அவதூறுகளாலும் பொய்களாலும் வன்மத்தாலும் அதை மாற்ற துடிக்கிற சக்திகளாக பாஜக சங்கபரிவார சக்திகள் விளங்குகிறார்கள். அதனுடைய குறியீடாக கமலாலயம் வாசலில் அன்றாடம் அண்ணாமலை அவருக்கு தோன்றுவதை எல்லாம் பேசுவார். அவருக்கு என்ன சொல்லப்படுகிறதோ அவற்றை பேசுவார். அது உண்மையா பொய்யா என்று ஆராயாமல் பேசுவார். அதே வேலையை ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு ஆளுனர் ரவியும் செய்து கொண்டிருந்தார். இப்போது ஆளுனர் ரவியும் கொஞ்சம் அடங்கி இருக்கிறார். அண்ணாமலையும் கொஞ்சம் அடக்கப்பட்டிருக்கிறார். 


ஆர்.என். ரவி அண்ணாமலை வரிசையில் விஜய்




ஆளுனர் ரவியினுடைய வீச்சும் அண்ணாமலையின் வீச்சும் ஓய்ந்திருக்கிற நிலையில் அந்த அவதூறுகளை இட்டுக்கட்டப்பட்ட பொய்களை வாயில் வந்ததை எல்லாம் பேசுகிற அந்த பேச்சுகளை விஜய் கையில் எடுத்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்று ஒரு கட்சியை தொடங்கி நாங்கள் மாற்று அரசியலை கொண்டு வந்து நிறுவ போகிறோம் என்று சொல்லி களத்திற்கு வந்திருப்பவர் விஜய். நேற்று நாகப்பட்டினத்திற்கு வருகை தந்து முழுக்க முழுக்க ஃபேக்சுவல் எரர் என்று சொல்லக்கூடிய பொய் தகவல்களை பரப்பிவிட்டு சென்றிருக்கிறார். நாகப்பட்டினத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்கள் குறித்து எந்தவிதமான ஆய்வையும் செய்யாமல் அங்கே மக்களுடைய நீண்ட கால கோரிக்கைகள் கடந்த நான்கரை ஆண்டுகளில் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை பற்றிய எந்தவிதமான அடிப்படை புரிதலும் இல்லாமல் வன்மத்தோடும் பொய்யை சொல்ல வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். 


அவர் வரும்போது அவருடைய பிரச்சார பயணத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று அவருடைய கட்சியின் மாவட்ட செயலாளர் தான் வேண்டுகொள் விடுத்திருக்கிறார் கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அங்கே அவர் அதை அரசாங்கம் ஏதோ திட்டமிட்டு செய்கிறது என்கிற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இப்படி முன்னுக்கு பின் முரணாக பொய்யை சொல்லி தன் மீது கவனத்தை ஈர்க்கிற இந்த வழக்கம் என்பது நாம் பாஜகவில் தான் பார்த்தோம். அந்த வழக்கத்தை அதை இப்போது இவரும் செய்கிறார். எனவே இவர் யார் சொல்லி செய்கிறார் எதற்காக செய்கிறார் என்கிற கேள்வி வருகிறது. பாஜகவின் தன்மையை இவர் ஏன் பிரதிபலிக்கிறார் என்கிற சந்தேகம் வருகிறது.


அவர் அரசியலை நேர்மையாக செய்யலாம். புதிய அரசியல் சக்தி என்று தன்னை காட்டிக் கொள்பவர் புதிய அரசியலை செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டிய அரசியலாக நாம் எந்த அரசியலை பார்க்கிறோமோஅவதூறு அரசியல் வன்ம அரசியல் அதை இவர் ஏன் கையில் எடுக்கிறார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அவர் நாகப்பட்டினம் குறித்து வைத்த அத்தனை கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. ஏற்கனவே அரசு அதை தெளிவுபடுத்தி இருக்கிறது. 


கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் நாகப்பட்டினத்தினுடைய பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அவர் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படவில்லை. கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். என்னுடைய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் குறிப்பாக சாமந்தான்பேட்டை என்கிற கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் தூண்டில் விளைவு அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அந்த நீண்ட கால கோரிக்கையை இந்த ஆட்சி காலத்தில் தான் நிறைவேற்றி ஐஐடியிலிருந்து ஆய்வு குழு எல்லாம் வந்து அதை ஆய்வு செய்து பார்த்து இங்கே அமைக்கலாம் என்று அவர்கள் பரிந்துரைத்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கிட்டத்தட்ட 32 கோடியில் அந்த திட்டம் நிறைவேறக்கூடிய அளவுக்கு அந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. அந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. 


அதுபோல நம்பியார் நகர் என்கிற பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுகிறது என்று அந்த மக்கள் மிகவும் வருந்தினார்கள். கோரிக்கை வைத்தார்கள். கடந்த ஆட்சி காலத்தில் எல்லாம் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆட்சி வந்த பிறகு சட்டமன்றத்தில் நாங்கள் எல்லாம் பேசி அந்த ஊருக்கு 10 கோடி ரூபாய் செலவில் கடலரிப்பு தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. அதுபோல நாகூர் பட்டின சேரி என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட ஊர்களை மட்டுமே நான் சொன்னால் கூட என்னால் மிகப்பெரிய பட்டியலை போட முடியும். நாகூர் பட்டச்சேரியில் கடலரிப்பு தடுப்புச் சுவர் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல நம்பியார் நகர் கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையம் 6 கோடி ரூபாய் செலவில் அந்த மையம் எழுப்பப்பட்டிருக்கிறது. 


மீனவ மக்களை பாதுகாக்கக்கூடிய புயல் வந்தால் அந்த பாதிப்பிலிருந்து மக்களை காக்கக்கூடிய புயல் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி மீனவ மக்கள் சார்ந்தே என்னுடைய தொகுதிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய கீழ்வேலூர் தொகுதிக்கு உட்பட்ட அக்கரப்பேட்டை மிகப்பெரிய மீனவ மக்கள் வாழக்கூடிய பகுதி அங்கே 100 கோடிக்கு மேல் செலவில் ஒரு மிகப்பெரிய மீன் இறங்குதளம் மீன் பதப்படுத்தும் நிலையம் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது. வேளாங்கண்ணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல சுற்றுலா மேம்பாடு சுற்றுலா மேம்பாட்டில் என்னுடைய தொகுதியில் நாகூர் சில்லடி கடற்கரையில் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் செலவில் ஒரு நெய்தல் பூங்கா இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்னொரு பூங்கா அது இசைமுரசு நாகூர் ஹனீபாவுடைய நூற்றாண்டை முன்னிட்டு அந்த பூங்காவுக்கு தான் நம்முடைய முதலமைச்சர் அவருடைய பெயரை சூட்டி இருக்கிறார். அது விரைவில் திறக்கப்பட இருக்கிறது. 


புரிதலே இல்லாமல் அவதூறு பேசுகிறார்




பல்வேறு கட்ட பணிகள் சுற்றுலாவுக்கான மேம்பாட்டுக்காக மீனவர் நலனுக்காக அதுபோல உள்கட்டமைப்பு மேம்பாடு நாங்க வந்து இந்த ஆட்சி அமைவதற்கு முன்னால் தேர்தலை சந்திக்கும் போது நாகப்பட்டினத்தில அக்கரைப்பேட்டை மேம்பாலம் நாகப்பட்டினத்தையும் அக்கரைப்பேட்டை இணைக்கக்கூடிய மேம்பாலம் அந்தரத்தில தொங்கிக்கிட்டு இருந்தது. அந்த ரயில்வே டிராக்குக்கு மேல மட்டும் கட்டி வச்சிருந்தாங்க அதை இந்த பக்கமும் இணைக்கல அந்த பக்கமும் இணைக்கல. ஏன்னா அதுக்கு நிலம் கையகப்படுத்தணும். மிகப்பெரிய பொருட் செலவாகும்னு சொல்லி கைவிடப்பட்ட ஒரு திட்டம். இந்த ஆட்சி வந்த பிறகு நாங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மக்களுடைய கோரிக்கையை ஏற்று 104 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பாலம் கட்டப்பட்டு இப்போது 75 விழுக்காடு பணிகள் முடிந்திருக்கிறது. இப்படி அவர் எதையுமே அது அங்க என்ன நடந்திருக்குன்னு கூட தெரிஞ்சுக்காம அங்க எவ்வளவு பெரிய வேலைகள் செய்யப்பட்டிருக்கு என்பதை பற்றி எந்தவிதமான புரிதலும் இல்லாமல் பேசி இருக்கிறார்.


காவிரியை இணைச்சிங்களா குடிநீரை கொண்டு வந்தீங்களான்னு பேசி இருக்கிறார். நாகப்பட்டினம் வரலாற்றிலேயே 1700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் மிகப்பெரிய திட்டம். அந்த திட்டம் அங்கே வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த பணிகள் ஏறத்தால முடியும் தருவாயில் இருக்கு. அதனால எல்லா இடமும் குடிநீர் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்புக்கான வேலைகள் நடந்திருக்குது. அதனால் சாலைகளில் தோண்டப்பட்ட குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்டதுனால சாலை எல்லாம் வந்து சிக்கலா போச்சு. திரும்ப அந்த சாலையை போடுறதுக்கு ஒவ்வொன்றுக்கும் நிதி ஒதுக்கீடு பெற்று அப்படி ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இன்னொரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு அப்படி ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக அந்த ஊருக்கு பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவர் என்ன குற்றச்சாட்டை வைத்தாலும் அந்த குற்றச்சாட்டுக்கு பதில் இருக்கிறது. 


அப்ப அவர் வைத்த எந்த குற்றச்சாட்டுமே உண்மையிலேயே அந்த மண்ணுக்கு என்ன தேவை இருக்கிறதோ என்ன கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ அதை சொல்லி இருந்தால் அது வந்து ஒரு மக்கள் இருந்து பேசலாம்னு சொல்லலாம். மக்களுக்கு இந்த தேவை இருக்கு. அரசாங்கம் இதுவரைக்கும் நிறைவேற்றாம இருக்கு. அதை அவர் அட்ரஸ் பண்றாரு. ஒரு புதிய கட்சியா வந்து இதை கையில் எடுத்து பேசுறாரு என்றால் அது மக்கள் நலன் சார்ந்தது. ஆனால் ஏற்கனவே மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் போய் அரசிடம் முறையிட்டு சட்டமன்றத்தில் வாதாடி அரசு  அதை கனிவோடு பரிசீலித்து ஏற்றுக்கொண்டு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களை நிறைவேற்றப்பட்டு வருகிற திட்டங்களை எல்லாம் செய்யவே இல்லை என்று சொல்வதனுடைய பின்னணி என்ன. இவர் இந்த அரசுக்கு அமைப்பெயரை ஏற்படுத்த நினைக்கிறார். ஒன்று இப்படி எல்லாம் பொய்யை பேசுவதன் மூலம் அவர் சாதிக்க நினைப்பது என்ன. உண்மையை பேசுங்க. உண்மையிலேயே அந்த மண்ணுக்கு என்ன தேவையோ அதை சொல்லுங்க.


நாகூர் ஹாஸ்பிட்டல பத்தி பேசி இருக்கிறார். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை என்பது 40 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்த ஒரு மருத்துவமனையை இந்த அரசு வந்த பிறகு முழுக்க அந்த பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிச்சிட்டு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில புதிய கட்டிடம் கட்டும்பணி நடந்து வருது. ஆனாலும் அந்த மருத்துவமனை புதுசா கட்டிடம் கட்டுறதுனால அதை முடிக்க கூடாதுன்னு சொல்லி தற்காலிகமாக வேறு ஒரு கட்டிடத்தில் அந்த மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே நான்கு பேர் பணியாளர்கள் மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள்னா அந்த நான்கு பேர் ஸ்டாப்பும் இருக்காங்க. வேக்கண்டே இல்ல. இதெல்லாம் அவர் தெரியாமலே அங்க வந்து பேசிட்டு இருக்காரு. 


ஒட்டுமொத்த நாகப்பட்டின மாவட்டத்திற்கு மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது அது நீண்ட கால பிரச்சனை அது. ஏன்னா அங்கு வந்து பணியாற்றுவதற்கு மருத்துவர்கள் பெரிதாக ஆர்வப்படுவதில்லை. இந்த ராமநாதபுரத்துக்கு போட்டுட்டா எங்களை தண்டிக்கிற மாதிரி அப்படின்னு ஒரு காலத்துல ஒரு புரிதல் இருந்தது போல நாகப்பட்டினத்தையும் பார்க்கிற மனோநிலை இருக்கிறது. பணியார்கள்ட்ட அப்படி ஒரு நிலை இருந்த பிறகும் கூட இந்த அரசு வந்த பிறகு முடிந்த வரைக்கும் ரோஸ்டர் சிஸ்டத்தின் மூலம் வந்து அங்கே பணியாளர்களை மருத்துவ பணியாளர்களை மருத்துவர்களை கொண்டு வந்து நிரப்பக்கூடிய பணியை ஒவ்வொரு கட்டத்திலும் செய்து வரக்கூடிய ஒரு சூழலை நம்ம பார்க்கிறோம். நாங்க பலமுறை கோரிக்கை வச்சிருக்கிறோம். அது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படக்கூடிய ஒரு சூழலை பார்க்கிறோம். 


இப்படிப்பட்ட இடத்தில் சுற்றுலா தொடர்பாக அவர் வைத்த குற்றச்சாட்டு, மருத்துவத்ததுறை தொடர்பாக அவர் வைத்த குற்றச்சாட்டு, உள் கட்டமைப்பு தொடர்பாக அவர் வைத்த குற்றச்சாட்டு, கோட்டைவாசல்ல வந்து பாலம் வந்து கட்டாம இருக்காங்க பழுதடைந்துருச்சு, அப்படின்னு சொல்றாரு. கோட்டைவாசல் பாலத்தை பற்றி ஒரு ஆய்வை செய்து பொதுப்பணித்துறையின் மூலம்நெடுஞ்சாலை துறை மூலம் ஆய்வு செய்து அந்த பாலம் ஸ்டெபிலிட்டியா இருக்கு. அது இன்னும் பல ஆண்டுகள் தாக்கு பிடிக்கும் தாங்கும் என்று ரிப்போர்ட் வந்திருக்கு. அப்போ பல ஆண்டுகள் தாக்குப் பிடிக்கக்கூடிய அளவுக்கு வலிமை பொருந்தி இருக்கக்கூடிய ஒரு பாலத்தை போய் யாராவது இடிப்பாங்களா? அரசுட்ட என்ன கஜானால நிரம்பியா இருக்கு பணம். அப்போ தேவை ஏற்படும் போது தான் அதை செய்ய முடியும். 


விஜய் அரசியல் நீடிக்காது நிலைக்காது




அப்ப அதையும் ஆய்வு செய்துவிட்டு ரிப்போர்ட் சாதகமா வந்ததுனால அதை இப்ப தேவையில்லை அது இடிக்க வேண்டியதில்ல அது நல்லா இருக்கு இன்னும் பல ஆண்டுகள் அது தாங்கும் என்பதனால் அந்த பாலம் கட்டல. எங்க பாலம் தேவையோ அங்க கட்டிக்கிட்டு இருக்கோம். அப்படி எல்லா திட்டமும் நான் பட்டியல் போட்டு சொல்ல முடியும். பெரிய லிஸ்ட் அது. அவ்வளவு பெரிய லிஸ்ட் தேவையில்லை. தொகுதி மக்களுக்கு தெரியும். அவங்க பார்க்கறாங்க இந்த அரசு அமைந்த பிறகு அங்க எப்படி இன்பராஸ்ட்ரக்சர் ஒவ்வொன்னா டெவலப் ஆயிருக்கு. இந்த ஐந்த ஆண்டுகளுக்கு முன்னால பார்க்காத காட்சி இப்ப எப்படி பார்க்கிறோம் அப்படிங்கிறத அந்த மண்ணின் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அப்ப இவருக்கு உண்மையை சொல்லி அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாததனால் அவதூறு அரசியலை பொய் அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அது நீடிக்காது நிலைக்காது. 


அவர் வந்து நாகரீக அரசியல் செய்யட்டும். உண்மையிலேயே மக்களுக்கு என்ன தேவையோ அதை பேசட்டும். அதை விடுத்துவிட்டு அண்ணாமலையினுடைய இடத்தை நிரப்புவதற்கு அவர் தேவையில்லை. ஆர்என் ரவியினுடைய இடத்தை நிரப்புவதற்கு அவர் தேவையில்லை. தமிழ்நாட்டில இப்படி நிறைய பேர நம்ம பார்த்துட்டோம். அந்த இடத்தை பிடிப்பதற்கு விஜய் ஏன் துடியா துடிக்கிறார் என்பதுதான் நம்முடைய கேள்வி. 


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் பற்றிப் பேசியிருக்கிறார். அது ஒன்றிய அரசின் பல்கலைக்கழகம். ஒன்றிய அரசுட்ட நம்ம வந்து ஒவ்வொன்றையும் பெறுவதற்கு அதுவும் கல்வி ரீதியாக பெறுவதற்கு எவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்திட்டு இருக்கோம். இந்த மாநில அரசு எவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்திட்டு இருக்குது. மாநில கட்சிகளை களத்தில இறங்கி எப்படிப்பட்ட போராட்டங்களை நம்ம நடத்திட்டு இருக்கோம்னு தெரியும். அப்ப அவர் யாரை குற்றம் சாட்டணும். ஒன்றிய அரசு தொடர்பாக ரயில்வே ஸ்டேஷன் தொடர்பாக அவர் குற்றச்சாட்டு வைக்கிறார். ஒன்றிய பல்கலைக்கழகம் தொடர்பா அவர் குற்றச்சாட்டைவைக்கிறார். அதுவும் ஒழுங்கா தெரிஞ்சுகிட்டு வச்சிருக்கலாம். அப்போ ஒன்றிய அரசை நோக்கி அவரு நம்மளோட சேர்ந்துல்ல பேசணும். எங்க பேசுறாரு.


பாஜக தொடர்பான விஷயங்கள்ல அவர் எங்க வெளிப்படுறாரு. அப்ப அவருக்கு திமுகவை குறி வைப்பதற்கான அஜெண்டா யாராவது கொடுத்திருக்காங்களா. அதுதான் ஒரு வேலையா. ஒரு கட்சியை குறி வைப்பது என்பது ஒரு புதிய சக்தியின் வேலையா. எந்த காலத்திலும் தமிழ்நாட்டு அரசியல் பார்த்தது இல்லையே ஒரு புதிய வரவு என்றால் என்ன செய்வாங்க இருக்கிற எல்லாரும் தப்பும்பாங்க இந்த கட்சி தப்பு இந்த கட்சி தப்பு இவங்க செய்யல அவங்க செய்யல நான் செய்வேன் அப்படின்னுதான் ஒரு புதிய சக்தி களத்துக்கு வரும். ஆனா இங்க எந்த கட்சியை பத்தியும் பேசுறது கிடையாது. பேச வேண்டியத பேசுறது கிடையாது. தமிழ்நாடு இன்றைக்கு சந்தித்து வரக்கூடிய மிகப்பெரிய நெருக்கடியே ஒன்றிய பாஜகவால் வந்திருக்கிற நெருக்கடிதான். 


நம்முடைய மாநில உரிமை தொடர்பான விஷயங்களல் பாஜகவுடைய நிலைப்பாடு, ஒன்றிய அரசுடைய நிலைப்பாடு கல்வி தொடர்பான விஷயத்தில ஒன்றிய அரசுடைய நிலைப்பாடு. நம்முடைய நிதி ஆதாரங்கள் விஷயத்தில ஒன்றிய அரசுடைய நிலைப்பாடு. நம்முடைய நதிநீர் பிரச்சனைகள்ல ஒன்றிய அரசினுடைய நிலைப்பாடு. ஒவ்வொன்னுலையும் பாருங்க, எந்த பக்கம் திரும்பினாலும் நமக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் நமக்கு முரண்பாடான கருத்தை கொண்டு வந்து நம் மீது திணிப்பதாகவும் இருப்பது யாரு, எந்த கட்சி, எந்த அரசு. அப்ப அந்த அரசை நோக்கி நீங்க என்ன உங்களுடைய வெளிப்பாடு இருக்கு. அப்ப வெளிப்பாடே இல்ல. மேம்போக்காக இருக்குது. 


விஜய் பேச்சில் பயர் விடுவதற்கு என்ன இருக்கு!




இன்னைக்கு ஒன்றிய அளவுல ராகுல் காந்தி ஒரு மிக முக்கியமான பிரச்சினைய கையில எடுத்து போராடிட்டு இருக்கறார். வாக்கு திருட்டு. அதை இந்த புதிய சக்தி விஜய் எந்த அளவுக்கு அட்ரஸ் பண்றாரு. அப்ப அந்த பக்கம் திரும்புறதே கிடையாது சும்மா ஒரு தீர்மானத்தை போடுறது. அந்த தீர்மானத்தை கூட மாநாட்டுல வாசிக்கிறது கிடையாது. மறைமுகமா இவங்களே பூட்டி வச்சுக்கிட்டு பிரஸுக்கு ஒரு அறிக்கைய கொடுத்துட்டு போயிருவாங்க. மாநாட்டுல வாசிச்சா மக்களுக்கு தெரிஞ்சிரும்ல. அப்ப மக்களுக்கு தெரிஞ்சிடவும் கூடாது. அந்த பிரச்சனை பேசு பொருளாக ஆயிடக்கூடாது. ஆனா தீர்மானம் நாங்க நிறைவேற்றி இருக்கோம்னு சொல்றதுக்கு ஒரு சான்றுக்கு காட்டுறதுக்கு ஒரு பேப்பர் வேணும். இப்படிப்பட்ட ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார். இந்த அரசியல வந்து இங்க உட்கார்ந்துிட்டு ஒப்பினியன் மேக்கர்ஸ் உட்கார்ந்துட்டு ஆஹா ஓஹோ அவர் பேச்ச பாத்தீங்களான்னு பயர் விட்டார் பாத்தீங்களா அப்படி பாத்தீங்களா இப்படி பாத்தீங்களான்னா. 


என்ன பயர் விட்டாரு நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லட்டும். நாகப்பட்டினம் தொடர்பா நேத்து அவர் பேசிட்டு போனதுல ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லட்டும். அப்ப அது எப்படிஃபயர் விட்டதாகும்? இங்க என்னங்க எல்லாருமே வந்து இதான் உட்கார்ந்துட்டு இருக்கோமா? யார் வேணாலும் எப்படி வேணாலும் பேசிட்டு போலாம். பதில் சொல்றதுக்கு ஆள் இல்லையா? அப்போ அப்படி எல்லாம் இல்ல. இல்ல தமிழ்நாட்ட அரசியல் களம் அப்படி இல்ல. தமிழ்நாட்டு அரசியல் களத்தை மக்கள்கூர்மையாக பார்க்கிறார்கள். 


அவருக்கு கூடுகிற கூட்டம் என்பது அவருடைய சினிமா கவர்ச்சிக்கு கூடுகிற கூட்டம். தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியையே தொடங்காமல் இதே விஜய் அவர்கள் நாகப்பட்டினத்துக்கு வந்திருந்தார்ன்னு வைங்க. நேத்து வந்தது அப்படியே கட்சி எல்லாம் விட்டுருங்க. தவெக கிடையாது. விஜய் நாகப்பட்டினத்துக்கு வரார்ன்னு சொல்லி அறிவிக்கப்பட்டு ஒரு நாள் பயணம் அந்த ஊர்ல அவர் நிகழ்த்தினா இந்த கூட்டம் வருமா வராதா? இதே கூட்டம் வரும். இதைவிட கூடுதலா கூட வரும். எல்லாரும் வந்து கூட பார்த்திருப்பாங்க. ஏன்னா அப்ப வெறும் விஜய்யா, ஒரு நடிகர் விஜய்யா எல்லா கட்சிக்காரங்களும் வந்து பார்த்திருப்பாங்க. அப்போ அவருக்கு இருக்கிற அந்த சினிமா கவர்ச்சி என்பது அது ஒரு நிலையானது. அதை வைத்துக்கொண்டு அவர் வந்து அப்படி ஃபயர் விட்டுட்டாரு இப்படி ஃபயர் விட்டுட்டார்ன்னு சொல்லி இப்படி பலபேர் பேசுவதும் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதும் அவர் வந்து கேள்விகளாக அடுக்கிவிட்டார் சவால் விட்டுவிட்டார் தைரியம் இருக்கான்னு கேட்டுட்டார், முதல்ல நீங்க பிரஸ் சந்திங்க. அந்த தைரியம் இருக்கா உங்களுக்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க, பத்திரிகையாளர்களை சந்திக்காத தலைவர்களே கிடையாது.


செய்தியாளர்களைச் சந்திக்க துணிச்சல் இருக்கா?




உலகத்துல ஊடகவியலாளர்கள் வைக்கக்கூடிய கேள்விகளை எதிர்கொள்வதுதான் துணிச்சல். அரசியல்ல அந்த துணிச்சல் வேணும். முதல்ல முதல் அடிப்படை தகுதி அதுதான். எந்த கேள்வி வேணாலும் கேளுங்க. பதில் சொல்றேன் என்பதுதான் ஒரு ஒரு தலைவருக்கான இலக்கணம். அது எங்க போச்சு உங்கள்ட்ட? நேத்து வந்து பிரஸ் அப்பவும் உங்களை நோக்கி வராங்க. நீங்க அவங்களை வந்து பாக்காத போதும், அவங்கள வந்து நீங்க பார்க்க விரும்பாத போதும், அவங்க அவங்க கடமையை செய்றாங்க. மைக்க நீட்டுறாங்க. உடனே கண்ணாடியை தூக்குறீங்க. என்னன்னு கூட கே்கறதுக்கு உங்களுக்கு துணிச்சல் இல்லை. நீங்க துணிச்சலை பத்தி மற்ற தலைவர்களுக்கு சவால் விடுறீங்க. முதல்ல இந்த அடிப்படை துணிச்சலை நீங்கள் பெறுங்கள். இது துணிச்சல்னு கூட சொல்ல முடியாது. இது ஒரு சாதாரண அடிப்படையான ஒரு தகுதி இது. இந்த தகுதி கூட நீங்கள் இன்னும் அடையவில்லை. 


அப்ப நீங்க வந்து ஒரு ஒரு பிம்பம். உங்களுடைய புகழ் என்பது சினிமாவின் மூலம் கிடைத்திருக்கிற புகழ். உங்களுக்கு எல்லாரும் ரசிகர்களா இருக்காங்க. நாங்க கூட உங்க படத்தை விரும்பி பார்க்க கூடியவரா இருக்கிறோம். அடுத்த படம் வந்தாலும் பார்ப்போம். கடைசி படத்தையும் பார்த்தோம். அப்ப எங்களை எல்லாம் உங்க கணக்குல வச்சிட்டீங்களா? அப்ப உங்க கணக்கு என்பது என்ன? ஒரு தேர்தலையாவது நீங்க சந்திச்சிருக்கணும். நீங்க கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகள்ல உங்களுடைய துணிச்சலை நிரூபிப்பதற்கு பல இடைத்தேர்தல்கள் வந்தது. போட்டியிடல நீங்க. நாடாளுமன்ற தேர்தல் வந்துச்சு. உங்களுடைய கொள்கை எதிரியை களத்தில சந்திச்சிருக்க முடியும். போட்டியிடல நீங்க. 2026 தேர்தலுக்கு கூட இப்ப கடைசியா ஒரு படத்துக்கு ஆறு மாசம் கால் சீட் கொடுத்த மாதிரி இப்ப ஒரு ஆறு மாசம் கால் சீட் கொடுத்துருக்கீங்க. இந்த படம் ஓடுனா கண்டினியூ பண்ணுவீங்க. இந்த படம் ஃபிளாப் ஆயிடுச்சுன்னா விட்டுட்டு போயிடுவீங்க.


அது ஏற்கனவே ஒரு கேரள ஒரு திரைக்கலைஞர் ஒரு நடிகை அவர்கள் வந்து சொல்லிருக்காங்க. அவர்ட்ட நான் பேசும்போது அவர் சொன்னாரு அப்படின்னு அது உண்மையா பொய்யான்னு தெரியல. ஆனா அவங்க சொல்லிருக்காங்க. அதை நீங்க மறுக்கல. அப்போ இப்படித்தான் இந்த அரசியல் வந்து முன்னிறுத்தப்படுகிறது. இது அவ்வளவோ பெரிய ஒரு பெரிய ஒரு சுயம்புவாக களத்தில இருந்து வர்ற ஒரு லீடரோட ஒப்பிட்டு எக்ஸ்டம்போரா பேசக்கூடிய லீடர்ஸோட ஒப்பிட்டு எந்த கேள்வி வைத்தாலும் பதில் சொல்லக்கூடிய லீடர்ஸோட ஒப்பிட்டுஃயர் விட்டுட்டாரா அப்படி விட்டுட்டாருன்னு 10 பேர் ஏன் பேசுறீங்க. அப்போ இது ஒரு வேலை திட்டம் போல இருக்கு. புனைவா இருக்கு. ஒரு ஒரு செயற்கையா இருக்கு. ஒரு கட்சியை தொடங்குவதும் அவர வந்து ரொம்ப தள்ளி கொண்டு வந்து விடுறது களத்துல அவர் வரவே மாட்டாரு. வீக்கெண்ட்ல வருவாரு. எப்போவது ஒரு நாள் வருவாரு. ஏதாவது ஒன்னு பேசுவாரு. அதுவும் வந்து ரொம்ப ஸ்கிரிப்டடா பேசுவாரு. எதுவும் திடீர்ல்லாம் பேச சொன்னா பேச மாட்டாரு. அப்ப இப்படி வந்து ஒரு வடிவமைக்கப்பட்ட ஒரு தலைமை ஒரு வடிவமைக்கப்படுகிற ஒரு கட்சி ஒரு டிசைனா இருக்கு எல்லாம். இது வந்து தமிழ்நாட்டுஅரசியலுக்கு உகந்தது அல்ல.


மக்கள் பிரச்சினையை பேச வேண்டும் விஜய்




நீங்க மக்கள் பிரச்சனையை பேசுங்க. நீங்க மக்கள் பிரச்சனையை உங்க கவனத்துக்கு வந்து அதன் மீது அக்கறை கொண்டு நீங்க பேசி இருந்தா நாகப்பட்டினத்தில் வந்து இப்படி பொய்யையும் புரட்டும் பேசி இருக்க மாட்டீங்க. உண்மையிலேயே நாகப்பட்டின மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்குன்னு பேசிருப்பீங்க. அந்த மக்கள்ட்ட இன்னும் கோரிக்கை நிறைவேற்றப்படாம கோரிக்கை என்ன இருக்கு, அதை எடுத்து அட்ரஸ் பண்ணிருப்பீங்க. அது அந்த மக்களுக்கு இப்ப வலு சேர்க்கும். ஓ விஜய் வந்து சொல்றாரு இந்த கோரிக்கை எல்லாம் மிச்சம் இருக்கு இத பேசுறதுக்கு விஜய் வருகிறாரு. இப்ப நாங்களும் பேசத்தானே செய்றோம். எல்லா கோரிக்கையும் நிறைவேறிடுச்சா. அப்ப சட்டமன்றத்துல அடுத்த கூட்டம் நடந்தா நாங்க என்ன எல்லா கோரிக்கையும் நிறைவேறிச்சு, எனக்கு டைம் தேவையில்லை வாழ்க அப்படின்னு சொல்லிட்டு உட்காரவா போறோம். சட்டமன்ற கூட்டம் எப்ப கூடும் அடுத்தது எந்த பிரச்சனைய பேசலாம்னு தான காத்திருக்கோம். அப்ப அது மாதிரி இன்னும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் இருக்கு, மக்களுக்கு தேவைகள் இருக்கு, அதை பேசுவதற்கு ஒரு கட்சி வந்து பேசலாம். பல கட்சிகள் பேசணும் பல தலைவர்கள் பேசணும், மக்களின் குரலாக பல தலைவர்கள் பல கட்சிகள் பேசும்போதுதான் அந்த குரலுக்கு ஒரு பெரிய வலிமை சேரும் .அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். அப்படி ஒரு சக்தியாக விஜய் வந்தால் அது மக்களுக்கான அரசியல். ஆனா அதெல்லாம் பேச மாட்டேன் பொய்தான் பேசுவேன் அப்படின்னா பொய் பேசியவர் என்ன நிலைமைக்கு ஆனார்ன்னு பார்க்கிறோம் 


ரெண்டு ஐபிஎஸ்கள் தமிழ்நாட்டுல பொய்யையும் புரட்டையும் அன்றாடம் பேசி பேசி தமிழ்நாட்டுல இன்னைக்கு அவங்களுடைய நிலைமை என்னன்னு பார்க்கிறோம் கண்ணால பார்க்கிறோம். அதுபோல மக்களால் நிராகரிக்கப்படக்கூடிய நிலைமைதான் விஜய்க்கும் வரும்.  அதாவது அண்ணாமலை என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை இப்ப அவர் செய்யல. அவர் இப்ப அன்றாட பிரச சந்திக்கிறாரா. இல்ல நீங்களே போய் கேள்வி கேட்டாலும் ஆனா நான் ஒரு தொண்டனா இப்ப நான் பேசுறதுக்கு தயாரா இல்லன்னா சொல்லிட்டு போயிடுறாரு. அதே மாதிரி வந்து ஆர்என் ரவி இப்ப பேச்சு மூச்சே காணோம். பழைய சேட்டை எல்லாம் இப்ப செய்றதில்லை. அவரும் வந்து அந்த நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு உச்ச நீதிமன்றம் ஓங்கி தலையில் குட்டிய பிறகு அவர் வந்து அந்த பழைய வீரியத்தோடு இல்லை. அப்ப ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஓய்வு பெற்ற நிலையில் ஆகிவிட்டார்கள். அப்போ அவங்க டிஸ்சார்ஜ் ஆன உடனே இவர் அட்மிட் ஆகிருக்கார். இவர் அட்மிட் ஆகி ஒரு பாசிட்டிவவான அரசியலை முன்னெடுத்தால் நாம் வரவேற்க தயாராக இருக்கிறோம். 


இவர் கட்சி தொடங்கியவுடன் வரவேற்ற முதல் கட்சி விடுதலை சிறுத்தைகள்ல் கட்சி. இவர் மாநாடு அறிவித்தவுடன் வாழ்த்து சொன்ன முதல் தலைவர் எங்களுடைய தலைவர் எழுச்சி தமிழர். அப்ப எங்களுக்கு காழ்ப்பு கிடையாது. வன்மம் கிடையாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை அவரோட கூட்டணி சேரலாம்ங்கிற எதிர்பார்ப்பு நாங்க இல்ல. அவர் கூட்டணிக்கு அழைச்சார் போனோமா? அந்த மாதிரி கணக்கு எங்களுக்கு கிடையாது. அப்ப நாங்க உள்ளன்போடு பார்க்கிறோம். வரட்டும் யார் வேணாலும் வரட்டும். வந்து கட்சி தொடங்கட்டும். அவங்க கருத்தை சொல்லட்டும். அவங்க கொள்கையை பேசட்டும். மக்கள்ட்ட அவங்களுக்கு ஏற்பு இருந்தா அவங்க நிக்க போறாங்க. மக்கள் ஏற்கலைன்னா ஒரு தேர்தலோட காணாம போயிடுவாங்க. இதுதான் நம்ம பார்த்துட்டு வர அரசியல். அப்ப அதுல ஏன் நம்ம போய் அவர் மேல வன்மத்தை கைக்கிட்டா அது நமக்கு தேவையில்லை. ஆனால் அவர் இப்போது இருக்கிற கட்சிகளின் மீது வன்மத்தை கக்குகிறார். இந்த வன்மத்தை கக்குகிற அரசியல் என்பது யாருடைய அரசியல்? அதுதான் நான் கேட்கிறேன். 


வன்மத்தைக் கக்கும் அரசியலை செய்கிறார் விஜய்




வன்மத்தை கக்குகிற அரசியல், பொய்யை புரட்டை சொல்லுகிற அரசியல், ஃபாக்சுவல் எரரோடு பேசுற அரசியல் யாருடைய அரசியல்? அதுதான் நான் ரவியையும், அண்ணாமலையும் ஒப்பிட்டு சொல்றேன். இல்ல இது ஒரு அவருக்கு கூறுகிற கூட்டம் இல்ல அவருக்கு வரக்கூடிய அவர் சொல்ற விஷயம்.  அவருக்கு எல்லா தரப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நாமும் அவருடைய ரசியர்களாக இருக்கிறோம். அப்ப எல்லா தரப்பும் அவரால் ஈர்க்கப்பட்டவர்களாக ஏற்கனவே ஒரு களத்தில இருக்கும்போது அவர் வந்து ஒரு புதிய களத்தில வெறும் சினிமா பத்தி மட்டும் பேசல அரசியல் பேசுகிறார். அவர் வந்து வெறும் சினிமா நடிகரா மட்டும் இல்ல இப்ப ஒரு தலைவர் ஆயிட்டார். அவர் ரசியர் மன்றம் மட்டும் வச்சுக்கல. இப்ப ஒரு கட்சி நடத்துறார். அப்ப கட்சி என்று வந்துவிட்ட பிறகு ஒரு தலைவர் என்கிற இடத்திற்கு அவர் தன்னை அறிவித்துவிட்ட பிறகு அவர் வந்து அரசியல் செய்ய வந்துவிட்ட பிறகு அவர் எங்கள் மீது திமுக கூட்டணியின் மீது திமுகவின் மீது ஆட்சியின் மீது அடுக்கடுக்கான அவதூறுகளை செய்கிறார்.


கேள்வி வைத்தால் பதில் சொல்லலாம் குற்றச்சாட்டு வச்சா பதில் சொல்லலாம் அவதூறு செய்கிறார் அப்ப அதை கட்டுடைக்க வேண்டிய அந்த அவதூறை அம்பலப்படுத்த வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்படுது. உடனே நாங்க ரியாக்ட் பண்ணிட்டா இவங்க எல்லாம் பயந்துட்டாங்க. ஒருத்தர் தைரியமானவரா பயந்தவராங்கறத எதுங்க காட்டும். களம் தான் காட்டும். நாங்க களத்தை விட்டு விலகிட்டோமா. சரி விஜய் வந்துட்டாரு இன்ன நமக்கு வேலை இல்ல நம்ம போயிருவோம் நாளைக்கு ஒரு பிரச்சனைனால நாங்கதான் நிப்போம். அந்த களத்துல விஜய் நிக்க மாட்டார். இன்னைக்கு ஒரு பிரச்சனைாலே நாங்கதான் நிக்கிறோம். நேத்து ஒரு பிரச்சனை நாங்கதான் நின்னோம்.


எங்கே பிரச்சனை தமிழ்நாட்டில் யாருக்கு என்றாலும் உடனே களத்திற்கு போவது போராடுவது, அதை எடுத்து பேசுவது உலகத்தில யாருக்கு நடந்த இருந்தாலும் பேசுவது நாங்களாதான் நிக்கிறோம். அப்ப களத்தை விட்டு நாங்க அப்புறப்படுத்தப்படவில்லை. அப்புறப்படுத்த முடியாது. எங்கள இஸ்யூ தான் வழிநடத்த போகுது. இஸ்யூ வந்து விஜய் எடுப்பாரா கையில பாஜக எதிர்ப்பை திமுக கூட்டணியை விட தீவிரமாக அவர் முன்னெடுப்பார்ன்னு முன்னெடுத்தார்ன்னு காட்டுங்க. நாங்க அவரை பத்தி பயப்படலாம். ஆக நம்ம ஒரு அடி பாஞ்சா அவர் ரெண்டு அடி மூணஅடி போறாரு. அப்ப நம்ம அரசியலுக்கு சிக்கல் வந்துருச்சு. ஐயயோ ஆட்டம் காணுது நம்ம அரசியல்ன்னு நாங்க பயப்படலாம். அவர் என்ன கையில எடுத்துட்டாரு . அதான் நான் கேட்கிறேன். 


பிஜேபி எதிர்ப்புல எங்களை விட என்ன அவர் ஒரு படி மேல போயிட்டாரு. அப்போ மேம்போக்கான சில விஷயங்களை செய்து இந்த வாக்குகளை குறி வைக்கிறார். அதுதான் அப்ப நம்ம அத உடைக்க வேண்டிய தேவை இருக்குல்ல. அவர் வந்து சிறுபான்மைனர் வாக்குகளை உடைக்க வராரு. பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை உடைத்து அதுல கொஞ்சமாவது ஒரு உடைப்பை ஏற்படுத்தினா இந்த பக்கம் ஒரு சலனத்தை ஏற்படுத்த முடியும். அது வேற சக்திகளுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கும்னு அவர் நினைக்கிறார். அல்லது அவருக்கு பின்னால் இருக்கக்கூடியவர்கள் நினைக்கிறாங்க. அப்ப அந்த இடத்தில அவருடைய நோக்கம் என்ன. அவருடைய அரசியலுடைய பின்னணி என்னங்கிறத பேச வேண்டிய தேவை இருக்கு. அவர் எங்களைப் பற்றி பொய் சொல்லும்போது அது பொய் என்று சொல்ல வேண்டிய ஒரு தேவை எங்களுக்கு ஏற்படுது. இதை கூட நாங்க சொல்லக்கூடாதா? 


அலையாத்தி காடுகளை மேம்படுத்துவதற்கு பட்ஜெட்ல மிகப்பெரிய அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதை மேம்படுத்தக்கூடிய வேலையை அரசு செஞ்சிருக்கு. அப்ப ஒன்னு நடந்துட்டு இருக்கும்போது ஒன்னு நடந்திருக்கும் போது அதை மறைத்துவிட்டு ஒன்றுமே நடக்கவில்லைன்ற தோற்றத்தை ஏன் கொடுக்கணும்? மீன்வள பல்கலைக்கழகம் ஜெயலலிதா அம்மையார் பெயரிலேயே நாகப்பட்டினத்தில இயங்கிட்டு இருக்குது. அது கடல்சார் பல்கலைக்கழகம் இல்லையா? மீன்வள பல்கலைக்கழகம்னா என்ன? விவசாயம் சார்ந்ததா? அது என்ன நெசவாளர் சார்ந்ததா? அது கடல் சார் ஒரு துறைதான அது? அப்ப கடல் சார்ந்த ஒரு மீன்வள பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில இயங்கிக்கிட்டு இருக்கு. அதை கூட நாகப்பட்டனத்தில இருந்து வெளிய கொண்டு போயிடலாம். சென்னை போன்ற இடத்துக்கு கொண்டு போயிடலாம்ங்கிற ஒரு முயற்சி நடந்தபோது, அது தடுத்து நிறுத்தப்பட்டு அங்கதான் அது இயங்கணும்னு சொல்லி அது தொடருது அங்க அந்த பெயரை ஜெயலிதா அம்மா பெயரை அந்த பல்கலைக்கழகத்திற்கு வைப்பதற்கு ஆளுனர் அந்த அரசாணைக்கு கையெழுத்து போடாம திருப்பி அனுப்பிட்டார். அதை இந்த அரசு போராடி சட்டமன்றத்தில அதற்கு மசோதா கொண்டு வந்து அதை வந்து திரும்ப நிறுவுவதற்கான வேலையை இந்த அரசு செஞ்சிருக்குது. அது ஜெயலலிதா அம்மா பேர்தான போனா போதுன்னு விடல. அப்ப ஏற்கனவே இங்க இருக்கிற ஒன்ன ஏன் இல்லைன்னு சொல்றீங்க? 


முதல்வர் மீதான புகார் - ஒரு ஆதாரத்தைக் காட்டுங்க 




முதலமைச்சருடைய வெளிநாடு பயணத்தை வந்து அவர் விமர்சனம் பண்ணிருக்காரு. நான் தொடக்கத்திலேயே அண்ணாமலை பாணியில அவர் போறாருன்னு சொன்னேன்ல. இது யாருடைய பாணி சொல்லுங்க. முதலமைச்சர் 2022ல் துபாய் பயணம் மேற்கொண்டபோது அண்ணாமலை கமலாலயம் வாசல்ல நின்னு என்ன சொன்னாரு? நிறைய பேப்பர்ஸ் எல்லாம் எடுத்து போட்டாரு. A4 சீட் எக்செல் சீட்லாம் எடுத்து போட்டு பாருங்க இந்த கம்பெனி இது வந்து இவருக்குதான் இவரு காசுதான் இங்க போய் இப்படி வருது அப்படி வருதுன்னு எக்செல் சீட்லாம் எடுத்து போட்டார்ல. இந்த நிமிடம் வரை அண்ணாமலை அதை நிரூபிச்சிருக்காரா. அவர் கையில தான ஈடி இருக்கு. அவங்க கட்சி கையில தான எல்லா துறையும் இருக்கு. இந்த நிமிடம் வரை முதலமைச்சருடைய 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு பயணங்கள் குறித்து பாஜகபிரஸ்ஸை கூட்டி பத்திரிகையாளர் முன்னிலையில வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இந்த நிமிடம் வரை பாஜக சான்றுகளோட ஒரு முடிவு சொல்லி இருக்கா அதை நிறுவி இருக்கா இல்ல அது அன்னைக்கு செய்தியோட போயிடுச்சு அவ்வளவு தான். அப்ப அன்னைக்கு பரபரப்புக்கு அந்த பயணத்தை கொச்சைப்படுத்துவதற்கு அவங்களுக்கு அன்னைக்கு தேவைப்பட்டது. அது நீங்க ஏன் சார் அந்த இதை கையில எடுக்குறீங்க. 


நீங்கதான் பாஜக உடைய கொள்கை எதிரியாச்சே. உங்களுடைய கொள்கை எதிரிங்கள பாஜக அந்த அவதூறு அரசியல நீங்க ஏன் கையில எடுக்குறீங்க. முதலமைச்சருடைய வெளிநாட்டு பயணம் முதலீடுகளை ஈர்க்க அல்ல முதலீடுகளை கொண்டு சேர்க்க அங்க அங்க கொண்டு போய் இவர் முதலீடு செய்றதுக்கு அப்படின்னா நீங்க சான்று சொல்லுங்க. விஜய் வந்து பேப்பர வச்சுதானே படிக்கிறாரு. அதே மாதிரி ஒரு பேப்பர காட்டும் பாருங்க. ஒரு சான்று காட்டட்டும். காட்டல. போற போக்குல அடிச்சு விடுறது. இது யார் பாணி, இது யார் பாணி. தமிழ்நாட்டு அரசியல்ல போற போக்குல அடிச்சு விடுறது யார் பாணி. நான் இந்த ஒரு அரை மணி நேரம் உங்கிட்ட பேசிட்டு இருக்கேன் எதையாவது ஒன்னு நான் போற போக்குல அடிச்சு விட்டேனா. ஃபக்சுவல் ஏதாவது சொல்லிருக்கேனா யார் மீதாவது அவதூறு பொய் சொல்லிருக்கேனா,


எங்க தலைவர் அன்றாடம் செய்தியாளர்களை சந்திக்கிறார் ஒருஃபேக்சுவல் எரர். ஒரு தவறான தகவல். ஒரு அவதூறான செய்தி. அதெல்லாம் எங்க பாணியே கிடையாது. இந்த தமிழ்நாட்டு அரசியல்ல ஒரு காலத்துல அரசியல் கட்சியுடைய மேடைகள்ல பேச்சாளர்களுடைய பாணியா இருந்துச்சு. அது கூட இன்னைக்கு வந்து இந்த ஊடகங்களுடைய பெருக்கத்தால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பார்த்து பேசணும், கவனமா பேசணும்னு சொல்லி அந்த மேடைகள் கூட சீராகி வருவதை பார்க்கிறோம். அப்போ ஒரு பக்கம் ஒரு நாகரிக அரசியலை நோக்கி அரசியல் நகரும் போது நீங்க வந்து அண்ணாமலை அரசியலுக்கு ஆர் என் ரவி அரசியலுக்கு ஏன் போறீங்க. அதுதான் நான் திரும்பவும் கேட்கறேன். இது வந்து டிப்பிக்கல் ஆர் என் ரவி பாலிடிக்ஸ் டிப்பிக்கல் அண்ணாமலை பாலிடிக்ஸ்.


விஜய் வருகையால் பாதிப்பு அதிமுகவுக்குத்தான்




இப்போ திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டின்னு விஜய் சொல்றாருனா அதுல யாருக்கு பிரச்சனை. அதுல திமுகவுக்கும் திமுக கூட்டணிக்குமோ பிரச்சனை இருக்கா. அவர் எந்த கட்சி கட்சி அங்க வந்து காலி பண்றாரு. இதை எந்த ஒப்பினியன் மேக்கர்ஸ்ும் பேச மாட்டறாங்க. விஜய் வருகை விசிகவுக்கு ஆபத்து, விஜய் வருகை திமுகவுக்கு ஆபத்து. அவர் திமுகன்னு ஒன்னு இருக்குன்னு சொல்றாரு. விஜயே சொல்லாத நீங்க சொல்லிட்டு இருக்கீங்க. விஜய் திமுகன்னு ஒன்னு இருக்குன்னு அக்செப்ட் பண்ணி பேசுறார். அதனுடைய வலிமையை புரிஞ்சுக்கிட்டு பேசுறார். அதை அதை எதிர்க்கத்தான் நான் வந்திருக்கேன்னு பேசுறாரு. ஆனா அவர் சார்புல அவரை மிதந்தோதி பேசக்கூடியவங்க பூராம் திமுக ஓட்டுதான் போகப்போகுது . விசிக ஓட்டுதான் போகப்போகுது விசிக ஓட்டு எப்படி போகும் விசிக ஓட்டுனா முதல்ல என்ன. விசிக ஓட்டுனா சினிமா கவர்ச்சில வந்த ஓட்டா, விசிக ஓட்டுனா என்ன. 25 ஆண்டுகளுக்கு மேலாக விசிக வாக்கு வங்கின்னு ஒன்னு இருக்குல்ல. அது என்ன வாக்கு வங்கி. அது ரசிக மனோநிலையில் வந்த வாக்கு வங்கியா, அது அம்பேத்கரியத்தை பெரியாரியத்தை சொல்லி அந்த கோட்பாட்டின் அடிப்படையில் நாங்கள் பெற்றிருக்கிற வாக்கு வங்கி. அப்ப எங்கள் வாக்கு வங்கி அவர் பெற்றுட்டு போகணும்னா எங்களை விட தீவிரமாக அம்பேத்கரியம் பேசணும் எங்களை விட தீவிரமாக பெரியாரியம் பேசணும். என்ன பெரியாரியம் பேசிட்டாரு என்ன அம்பேத்கரியம் பேசிட்டாரு


சீமான் அவ்வளவு தூரம் பெரியாரை போட்டு கொச்சப்படுத்துறாரு. நாங்கதான் வந்து தொண்டைத்தண்ணி வத்த பதிலடி கொடுத்துட்டு இருக்கோமே தவிர எந்த தவெக நிர்வாகி வந்து பதிலடி கொடுத்தாரு. எங்க விஜய் வந்து அதுக்கு ரியாக்ட் பண்ணாரு பெரியார் மீது ஒரு மிகப்பெரிய அவதூறு சொல்றாருல சீமான். என்ன உங்களுடைய பதிலடி என்ன? பதிலடி கிடையாது. அப்ப பெரியார் அரசியல என்ன நீங்க முன்னெடுப்பீங்க? பெரியார் உணர்வாளர்கள் இதுல யார் பக்கம் நிப்பாங்க? இதுல விஜய் பக்கம் நிப்பாங்களா எங்க பக்கம் நிப்பாங்களா? அம்பேத்கரிய உணர்வாளர்கள் யார் பக்கம் நிப்பாங்க? ஒரு அட்ராசிட்டி நடக்குது ஒரு வன்கொடுமை நடக்குதுன்னா அங்க களத்துக்கு போறது யாரு? அந்த மக்களுடைய பிரச்சினையை அரசுக்கு சொல்றது யாரு? போராட்டம் நடத்துவது யாரு? அந்த மக்களுக்கு நீங்க தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. நீங்கள் கைவிடப்பட்டவர்கள உங்களோட நாங்க இருக்கேங்கிற நம்பிக்கை தர்றது யாரு? விசிக தான தர்றோம். அப்ப எங்களை விட எங்கள்ட்ட இருந்து அந்த ஓட்டை அவர் வாங்கிட்டு போனோம்னா எங்களை விட அவர் எங்க அந்த களத்துல நின்றுருக்காரு இப்பவும் நிக்கிறாரா? இல்லையே.


அதான் சொல்றேன் திரும்ப திரும்ப ஒரு போலியான பிம்பம் கட்டமைக்கப்படுது. அந்த ஓட்டை வாங்கிடுவாரு இந்த ஓட்டை வாங்கிடுவாரு. எப்படி வாங்குவாருன்னு வாங்குவதற்கான என்ன அரசியல் அவர்ட்ட இருக்கு அதனால அதெல்லாம் எங்களுக்கு அத பத்தில்லாம் பிரச்சனையே கிடையாது. நாங்க அவருக்கு பயந்தோ அவர் எங்க ஓட்டை வாங்கிருவார்னோ அப்படி எல்லாம் நாங்க வந்து பேசல. எங்கள் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்றோம் அவ்ளோதான். விஜய் பேசுறாரு திரும்ப திரும்ப பேசுறாருனா அந்த இடத்துல அவர் யாரை காலி பண்றார். அதிமுக என்கிற கட்சியவே அவர் காலி பண்றாரு அதிமுக  என்கிற கட்சியை உள்ள இருந்தே பலர் காலி பண்ணிட்டாங்க. பிஜேபி தன்பங்குக்கு பாதி காலி பண்ணிருச்சு. இப்ப விஜய் வந்து திமுகவுக்கு எதிர் நான்தான் நான் திமுக எதிரலதான் கூர்மைப்படுத்துறேன்னு சொல்லுவதன் மூலம் திரும்ப திரும்ப டிஎம் கே வெர்சஸ் டிவிகே என்று அவர் பேசுவதன் மூலம் அதிமுக என்கிற ஒரு மாபெரும் கட்சி தமிழ்நாட்டை அதிகம் முறை ஆண்ட கட்சி ஜெயலலிதா எம்ஜிஆர் போன்ற மாபெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்னைக்கும் களத்தில மிகவும் உயிர்ப்போடு இருக்கக்கூடிய ஒரு கட்சி அந்த தொண்டர்கள் வந்து ரொம்ப ஆக்டிவானவங்க ரொம்ப விசுவாசமானவங்க அந்த சின்னத்துக்குன்னு ஒரு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கு இதெல்லாம் யாருமே டிஸ்பயூட்டே பண்ண முடியாது. அப்படிப்பட்ட ஒரு கட்சி இன்னைக்கு சிதறி போயிருக்கு.


ஒரு ஒழுங்கான தலைமை அமையாம ஒரு ஒருங்கிணைந்த தலைமையின் கீழ இப்ப ஓரளவுக்கு திரண்டு இருக்கிற அந்த தலைமையையும் பிஜேபி முடிஞ்ச அளவுக்கு அங்க உள்ள வச்சு ஆட்களை எடுத்து எடுத்து அதை டிஸ்மேண்டில் பண்ணிட்டு இருக்கு. இப்ப கொஞ்சம் மிஞ்சி இருக்கிறதையும் விஜய் வந்து என்ன சொல்றாருன்னா மிஞ்சி இருக்கிறது எப்படி அது திமுக எதிர்ப்புல தான மிஞ்சி இருக்குது. திமுக வெர்சஸ் அதிமுக என்கிற அந்த எதிரசியல்ல தான் எடப்பாடி தலைமையில ஒரு 20 விழுக்காடு வாக்கு என்கிற அளவுக்கு அது மிஞ்சி இருக்கு. இப்போ திமுக எதிரசியலை விஜய் கூர்மைப்படுத்த கூர்மைப்படுத்த எந்த கட்சிக்கு ஆபத்து எந்த கட்சியினுடைய இருப்பு கேள்விக்குறியாகும். எந்த கட்சி திமுகவுக்கு எதிர் என்று முன்னிறுத்தப்படும் அப்போ ஏற்கனவே இருக்கக்கூடிய அதிமுகதான் தன்னுடைய இருப்பை இழக்கும். அப்போ ஒப்பினியன் மேக்கர்ஸ் இப்படி பேசுங்க. விஜய் வருகையால் அதிமுகவுக்கு ஆபத்துன்னு பேசுங்க. விஜய் வருகையால் அதிமுக செல்வாக்கு இழக்கும்னு பேசுங்க. விஜய் வருகையால் அதிமுக தன்னுடைய தன்மையை இழக்கும்னு பேசுங்க. அதுதான சரியா இருக்கும். 

 

ஆனா அவங்களுக்கு உண்மை தெரியுது. விஜய்ன்னு ஒருத்தர் எமர்ஜ் ஆனா டிவிகேன்னு எமர்ஜ் ஆனா டிஎம்கேக்கு எதிரா அது எமர்ஜ் ஆனா அது டிஎம் கேக்கு எதிரா ஏற்கனவே எமர்ஜ் ஆகி இருந்த ஒரு கட்சியைதான் காலி பண்ணுது, காலி பண்ணும் அப்படிங்கறது நல்லா தெரிஞ்சுமே இங்க வந்து வேற ஒரு கருத்தை ஒரு கட்டமைப்பை ஏற்படுத்திட்டே இருக்காங்க. அது வந்து காலம் அதை உணர்த்தும். முதல்ல விஜய் வந்து தேர்தல்ல போட்டிடட்டு முதல்ல அதுவே அதிமுக இடத்தையே அவர் பிடிப்பாராங்கறதும் தேர்தல் நின்னாதான் தெரியும். அது வந்து தேர்தல பார்க்கணும். நம்ம இப்ப ஒவ்வொரு கட்சிக்கும் திமுக கூட்டணிக்கு இவ்வளவு ஓட்டு திமுகவுக்கு இவ்வளவு ஓட்டு திமுக கூட்டனியில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இவ்வளவு  ஓட்டு இருக்கு. அதிமுகவுக்கு இவ்வளவு ஓட்டு இருக்கு பிஜேபிக்கு இவ்வளவு ஓட்டு இருக்கு நாம் தமிழருக்கு எட்டு விழுக்காடு ஓட்டு இருக்குன்னல்லாம் தேர்தல்ல போட்டியிடாமலயே பெர்செப்ஷன் அடிப்படையில எல்லாம் சொல்லப்பட்டதா. இந்த விழுக்காடுங்கறது எப்படி வந்துச்சு. இந்த விழுக்காடுங்கறது தேர்தல்ல போட்டியிட்டதுனால வந்துச்சு. ஆனா ஒரு கட்சிக்கு மட்டும் தேர்தலயே போட்டியிடாம ஒருத்தர் 15ங்கறாரு ஒருத்தர் 20ங்கறாரு ஏன் 50ன்னு சொல்லுங்க. அதுல ஏன் வஞ்சனம் பண்றீங்க. 


விஜய் 50 விழுக்காடு ஓட்டு வாங்குவாருன்னு ஏன் சொல்ல மாட்டறீங்க. நீங்க சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்கள அது ஏன் 10 எந்த அடிப்படையில சொல்றீங்க அது என்ன 15 எந்த அடிப்படையில சொல்றீங்க அது என்ன 20 ஏன் 50 சொல்லுங்க இல்ல 80 விழுக்காடு விஜயக்குன்னு கூட சொல்லலாமே. ஏன்னா அவர்தான் ப்ரூவ் பண்ணல. இப்ப ப்ரூவ் பண்ணாத ஒருவருக்கு நீங்க எப்படி ஒரு ஒருஃரிகரை பிக்ஸ் பண்றீங்க. எந்த கட்சிக்கு இப்படி பிக்ஸ் பண்ணீங்க திமுகவுக்கு 40 விழுக்காடு தேர்தல்ல போட்டியிடாமலயே பிக்ஸ் பண்ணிட்டீங்களா? நாம் தமிழருக்கு எட்டு விழுக்காடு தேர்தல்ல போட்டியிடாமலே பிக்ஸ் பண்ணிட்டீங்களா? தேர்தல்ல போட்டியிட்டு வாங்குனதுதானங்க சொல்றீங்க எல்லா கட்சிக்கும் அப்படித்தான் சொல்லுவோம். சொல்லிக் கொண்டிருக்கிறோம்.


தவகவுக்கு மட்டும் ஒரு தேர்தலை கூட ஒரு இடைத்தேர்தலை கூட அந்த கட்சி சந்திக்காமல் இருக்கும்போதே 15ங்கறீங்க 20ங்கறீங்க 25ங்கிறீங்க முதல்ல அது 25ஆ 15ஆ அஞ்சா ரண்டா ஒன்னா இல்ல நோட்டாக்கு கீழேயா எலக்சன் சந்திக்கட்டும். சந்திச்ச பிறகு எது உண்மையோ அத நம்ம பேசுவோம் என்றார் ஆளூர் ஷாநவாஸ்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆதரவு பெருகுது.. எதிரிகள் அஞ்சி நடுங்குகிறார்கள்.. பணிகளை வேகப்படுத்துவோம்.. விஜய்

news

ஆர்.என். ரவி, அண்ணாமலை இடத்தைப் பிடிக்க முடிவு செய்து விட்டார் விஜய்.. விசிக கடும் தாக்கு

news

பிரதமர் நரேந்திர மோடி.. இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

news

BCCI தலைவராகிறார் மிதுன் மன்ஹாஸ்.. காஷ்மீரைச் சேர்ந்தவர்.. சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்

news

H-1B விசா குழப்பம்.. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குத்தான் கட்டண உயர்வு.. அமெரிக்க அரசு விளக்கம்

news

என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி

news

நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்

news

செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அதிகம் பார்க்கும் செய்திகள்